சோலார் மின்சாரம் பயன்பாடு ராய்ச்சூர் மாவட்டம் சாதனை
சோலார் மின்சாரம் பயன்பாடு ராய்ச்சூர் மாவட்டம் சாதனை
ADDED : டிச 26, 2024 06:33 AM
ராய்ச்சூர்: சோலார் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, ஆரம்ப சுகாதார மையங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. சுகாதார மையங்களுக்கு சோலார் மின்சாரம் பயன்படுத்தும் நாட்டின் முதல் மாவட்டம் என்ற பெருமை, ராய்ச்சூர் பெற்றுள்ளது.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ராய்ச்சூர் அதிக வெப்பநிலை இருக்கும் மாவட்டமாகும். இதை சாதகமாக பயன்படுத்தி, சோலார் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம் வகுத்தோம். இதன்படி செல்கோ நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, சோலார் மின் உற்பத்தி திட்டத்தை, 2021ல் சுகாதாரத்துறை துவக்கியது.
சோலார் மின் உற்பத்தி செய்து, ராய்ச்சூரின் 51 சுகாதார மையங்களுக்கும், 191 துணை மையங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதனால் மின் கட்டண செலவு 70 சதவீதம் வரை குறைந்துள்ளது. அரசு கருவூலத்துக்கு 86.4 லட்சம் ரூபாய் மிச்சமாகிறது. சோலார் மின்சாரத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் மாவட்டம் என்ற பெருமை, ராய்ச்சூருக்கு கிடைத்துள்ளது.
ராய்ச்சூர் மட்டுமின்றி, கர்நாடகா முழுதும் இத்திட்டத்தை விஸ்தரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. இதனால் மாநிலத்தின் 3 கோடிக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் அடையும். அரசுக்கும் ஆண்டுதோறும் 7 முதல் 8 கோடி ரூபாய் வரை மிச்சமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

