ADDED : பிப் 21, 2025 09:56 PM
மெஹ்ரவுலி: தெற்கு டில்லியின் மெஹ்ரவுலி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் பெயரில் சோதனை நடத்தி, 20 கோடி ரூபாய் பணம் பறிக்க முயன்ற சம்பவத்தில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த அக்டோபர் 22ம் தேதி மெஹ்ரவுலி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்குள் சிலர் அதிரடியாக நுழைந்தனர். தங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்து, சோதனை நடத்த வந்ததாக அறிவித்தனர்.
வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து, மோசடியாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக கூறி மிரட்டினர். கைது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 20 கோடி ரூபாய் தர வேண்டும் என்று கூறினர்.
இவர்களின் நடவடிக்கையால் சந்தேகமடைந்த பண்ணை வீட்டு உரிமையாளர், வங்கிக்கு சென்று பணம் எடுத்துத் தருவதாக நம்பவைத்தார். அவருடன் கும்பலைச் சேர்ந்த இருவரும் வங்கிக்கு சென்றனர்.
இந்த வேளையில் தன் வக்கீலுக்கும் மேலாளருக்கும் ரெய்டு பற்றி அவர் தகவல் அளித்தார். அப்படி ஒரு ரெய்டை அமலாக்கத்துறை நடத்தவில்லை என்பதை உறுதி செய்து, அவருக்கு வக்கீல் தகவல் அளித்தார்.
தன்னுடன் வந்தவர்களிடம் அடையாள அட்டையை பண்ணை உரிமையாளர் கேட்டபோது, அவர்கள் அங்கிருந்து தப்பினர். அவர்களின் கூட்டாளிகளும் உஷார்படுத்தப்பட்ட தப்பினர்.
இதுகுறித்து தனிப்படை அமைத்து கும்பலை போலீசார் தேடி வந்தனர். இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பிரின்ஸ் டெவாஷியா கும்பலைச் சேர்ந்த இக்பால் குரேஷி, அருண் லால் ஆகிய இருவரை கிஸ்ராபாத் பகுதியில் போலீசார் கைது செய்தனர்.