பா.ஜ.,வில் இணைந்த ரஞ்சித் சிங் வீட்டில் 'ரெய்டு' அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு
பா.ஜ.,வில் இணைந்த ரஞ்சித் சிங் வீட்டில் 'ரெய்டு' அரசியல் பழிவாங்கல் என குற்றச்சாட்டு
ADDED : ஆக 03, 2025 02:26 AM

சண்டிகர்:சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் நேற்று முன் தினம் சேர்ந்த ரஞ்சித் சிங் கில், வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இது, ஆம் ஆத்மி அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என பா.ஜ., கூறியுள்ளது.
சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்த ரஞ்சித் சிங் கில், 'கில்கோ' நிறுவனம் வாயிலாக ரியல் எஸ்டேட் தொழிலிலும் கோலோச்சி வருகிறார்.
இந்நிலையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனியை அவரது இல்லத்தில் நேற்று முன் தினம் இரவு சந்தித்த ரஞ்சித் சிங் கில், பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
இந்நிலையில், சண்டிகரில் உள்ள ரஞ்சித் சிங் வீடு மற்றும் பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் கர்ஹாரில் உள்ள அவரது அலுவலகம் ஆகிய இடங்களில் பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, பஞ்சாப் மாநில பா.ஜ., தலைவர் சுபாஷ் சர்மா கூறியதாவது:
சிரோமணி அகாலி தளம் கட்சியில் இருந்து ரஞ்சித் சிங் கில் விலகிய பின், ஆம் ஆத்மி கட்சியில் சேருமாறு கடும் அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஆனால், கில் மறுத்து விட்டார். பஞ்சாப் மாநில முன்னேற்றத்துக்காக பா.ஜ.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து, ஊழல் தடுப்புப் பிரிவினரை, பஞ்சாப் ஆத்ம் ஆத்மி அரசு ஏவி விட்டுள்ளது.
அரசியல் ரீதியாக பழிவாங்கும் நடவடிக்கையாக ரஞ்சித் சிங் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு, எதிர்கட்சிகளை ஒடுக்க ஊழல் தடுப்புப் பிரிவை தவறாகப் பயன்படுத்துகிறது.
அதேநேரத்தில், ஆம் ஆத்மி அரசின் இந்தச் செயலை பஞ்சாப் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வரும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மக்கள் பதிலடி கொடுப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதலுக்கு, மிகவும் நெருக்கமானவராகவும், நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தவர் ரஞ்சித் சிங் கில்.
ஆனால், அகாலி தளம் கட்சியில் விசுவாசமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஓரங்கட்டப்படுவதாகவும், மற்ற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவும் குற்றம் சாட்டி அக்கட்சியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
கடந்த, 2017 மற்றும் 2022 பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் கர்ஹார் தொகுதியில் போட்டியிட்ட கில் தோல்வியடைந்தார்.

