சொத்து குவித்த 10 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு!': மாநிலம் முழுதும் 40 இடங்களில் லோக் ஆயுக்தா அதிரடி
சொத்து குவித்த 10 அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு!': மாநிலம் முழுதும் 40 இடங்களில் லோக் ஆயுக்தா அதிரடி
ADDED : பிப் 01, 2024 07:00 AM

பெங்களூரு: வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரில், கர்நாடகாவில் 10 அரசு அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், உறவினர் வீடுகள் என, ஒரே நேரத்தில் 40 இடங்களில் லோக் ஆயுக்தா அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில், தங்கம், வெள்ளி நகைகள், சொத்து ஆவணங்கள் சிக்கின.
கர்நாடகாவில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிக்கும் அரசு அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா அதிகாரிகள் ரெய்டு நடத்தி, தங்கம், வெள்ளி நகைகள், சொத்து பத்திரங்கள், விலை உயர்ந்த பொருட்களை பறிமுதல் செய்து வரும் நிகழ்வுகள், சமீபகாலமாக அதிகரித்து உள்ளது.
தொடரும் வேட்டை
இந்நிலையில் நேற்றும் லோக் ஆயுக்தா வேட்டை தொடர்ந்தது. அதுபற்றிய விபரம்:
துமகூரில் உள்ள கர்நாடகா ரூரல் தொழிற்சாலை வளர்ச்சி கழக அலுவலக அதிகாரி ஹனுமந்தராயப்பா; மாண்டியா பொதுப்பணித்துறை உதவி இன்ஜினியர் ஹர்ஷா, சிக்கமகளூரு வணிக வரி துறை அதிகாரி நேத்ராவதி; ஹாசன் உணவு துறை இன்ஸ்பெக்டர் ஜெகன்நாத்; கொப்பால் வன அதிகாரி ரேணுகம்மா...
சாம்ராஜ் நகர் கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி ரவி; மைசூரு மூடா ஊழியர் யக்னேந்திரா; பல்லாரி அரசு கல்லுாரி உதவி பேராசிரியர் ரவி; விஜயநகரா மின்துறை அதிகாரி பாஸ்கர்; மங்களூரு மெஸ்காம் இரண்டாம் நிலை உதவியாளர் சாந்தகுமார்.
மேற்கண்ட 10 அதிகாரிகளும் தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பதாகவும், அரசு திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்க, லஞ்சம் வாங்குவதாகவும் லோக் ஆயுக்தாவுக்கு அடிக்கடி புகார்கள் சென்றன.
இதையடுத்து, 10 அதிகாரிகள் வீடுகளிலும், ரெய்டு நடத்த லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணிஷ்வர் ராவ், போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார். இதையடுத்து, 10 அதிகாரிகளின் வீடு, அலுவலகங்கள், அவர்களின் உறவினர்கள் வீடுகள், பண்ணை வீடுகள் என, ஒரே நாளில் நேற்று 40 இடங்களில், லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர்.
மாண்டியா, ஹாசன், சிக்கமகளூரு, மங்களூரு, பல்லாரி, விஜயநகரா, துமகூரு, பாகல்கோட் உட்பட மாநிலம் முழுதும் சோதனை நடந்தது.
காலை 7:00 மணிக்கு சோதனையை ஆரம்பித்த, லோக் ஆயுக்தா போலீசார், அதிகாரிகள் வீடுகள் ஒரு இடம் விடாமல் அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தினர். இந்த சோதனையில், அதிகாரிகள் 10 பேரும் வருமானத்திற்கு அதிகமாக, சொத்து சேர்த்தது தெரியவந்தது.
காங்., பிரமுகர் மருமகன்
அனைவரின் வீடுகளில் இருந்தும் தங்கம், வெள்ளி நகைகள், பணம் சிக்கின. விலை உயர்ந்த கை கடிகாரங்கள், அழகு சாதன பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்த நகைகள், பணம், பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
அதிகாரிகள் 10 பேரும், சொத்துக்களை வாங்கி குவித்ததும் தெரிந்தது. இதனால் சொத்து ஆவணங்கள், வங்கி கணக்கு புத்தகங்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். இவைகளையும் எடுத்து சென்று உள்ளனர்.
சொத்து குவித்த 10 பேருக்கும், நோட்டீஸ் அனுப்பவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். ஒரே நாளில் 10 அதிகாரிகள் வீடுகளில், லோக் ஆயுக்தா ரெய்டு நடந்தது, சக அரசு அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.
இவர்களில், மங்களூரு மெஸ்காம் இரண்டாம் நிலை உதவியாளர் சாந்தகுமார், மாண்டியா காங்கிரஸ் பிரமுகர் ஒருவரின் மருமகன் என்று கூறப்படுகிறது.
ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர் என்றாலும், அவரது வீட்டில் லோக் ஆயுக்தா 'ரெய்டு' நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரெய்டு அந்த காங்கிரஸ் பிரமுகரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
ரெய்டு குறித்து ஐ.ஜி., சுப்பிரமணிஷ்வரர் ராவ் கூறுகையில், ''லஞ்சம் வாங்குவதாகவும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தததாகவும், 10 அதிகாரிகள் மீது புகார் வந்ததால், அவர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளோம்.
''நகை, பணம், விலை உயர்ந்த பொருட்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவற்றின் மதிப்பை கணக்கிடும் பணி நடக்கிறது. 10 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி, தீவிர விசாரணை நடத்தப்படும்,'' என்றார்.