ரயில் முன்பதிவு வசதி 60 நாட்களாக குறைப்பு ஆதரவும், எதிர்ப்பும்...!
ரயில் முன்பதிவு வசதி 60 நாட்களாக குறைப்பு ஆதரவும், எதிர்ப்பும்...!
ADDED : அக் 18, 2024 11:05 PM

ரயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளதற்கு, பொதுமக்கள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.
நீண்டதுார பயணம் மேற்கொள்ளும், பயணியரின் முதல் சாய்சாக இருப்பது ரயில் தான்.
முன்பதிவு செய்த பெட்டியில் பயணம் செய்யும் பயணியருக்காக, தனி இருக்கை ஒதுக்கிக் கொடுக்கப்படும். படுக்கைகளில் அமர்ந்தும், துாங்கிக் கொண்டும் செல்லலாம்.
பஸ்சில் படுக்கை வசதி கொண்ட சீட் இருந்தாலும், பள்ளங்களில் ஏறி, இறங்கும்போது துாக்கி அடிக்கும். இதனால் இரவில் துாக்கம் தொலைந்து போகவும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் ரயிலில் அப்படி இல்லை. எந்தவித அலுங்கல், குலுங்கல் இல்லாமல் செல்லலாம். பயணத்தின்போது இயற்கை உபாதையை கழிக்கவும் ரயில் பயணமே ஏற்றது.
நல்வாய்ப்பு
ஆனால் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில், டிக்கெட் கிடைப்பது அவ்வளவு எளிது இல்லை. இப்போது 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு சொந்த ஊர் செல்வதற்கு முன்பே திட்டமிட்டு, டிக்கெட் முன்பதிவு செய்ய இந்த முன்பதிவு நல்வாய்ப்பாக உள்ளது.
ஆனாலும் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணியர், கடைசி நேரத்தில் தங்கள் டிக்கெட்டை ரத்து செய்வதும் வழக்கமாக நடக்கிறது. இதனால் மற்றவர்களாலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், ரயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து பெங்களூரில் வசிப்பவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
என் சொந்த ஊர் திருநெல்வேலியின் பேட்டை. பெங்களூரில் இருந்து நேரடியாக திருநெல்வேலி செல்ல, தினமும் ஒரே ஒரு ரயில் தான் உள்ளது. இந்த ரயிலுக்கு எப்போதும் டிமாண்ட் அதிகம். இந்த ரயிலில் பயணிக்க பயணியர் 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்வதால், கடைசி நேரத்தில் பயணம் செய்ய நினைப்பவர்களுக்கு டிக்கெட் கிடைப்பது இல்லை. புதிய நடைமுறை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
அருண்ராஜ்,
தனியார் நிறுவன ஊழியர்,
எலக்ட்ரானிக் சிட்டி
என் சொந்த ஊர் துாத்துக்குடியின் முத்துநகர். ரயில் பயணத்திற்கு டிக்கெட்டை 120 நாளுக்கு முன்பே முன்பதிவு செய்யும் நடைமுறையில், மாற்றம் செய்து இருப்பது நல்லது. முன்கூட்டியே பதிவு செய்து, கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்பவர்களால், மற்றவர்களுக்கும் டிக்கெட் கிடைப்பது இல்லை. அவசர தேவைக்காக ஊருக்கு செல்ல நினைப்பவர்கள், பஸ்களை நாடி செல்ல வேண்டி உள்ளது. ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக உள்ளது.
கவுசிக்,
மருந்து விற்பனை நிறுவன ஊழியர், கோரமங்களா
ரயிலில் முன்பதிவு வசதியை 60 நாட்களாக குறைத்தது, சரியான நடவடிக்கை இல்லை. குடும்பத்துடன் நீண்ட துாரம், ஆன்மிக பயணம் மேற்கொள்ள இருப்பவர்களுக்கு 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை பயனுள்ளதாக இருந்தது. இப்போது 60 நாட்களாக குறைத்துள்ளனர். இதனால், குடும்பத்துடன் செல்பவர்களுக்கு முன்பதிவு செய்வதில் சிரமம் ஏற்படும்.
ராஜன், பொம்மசந்திரா
ரயில் முன்பதிவு வசதியை 60 நாட்களாக குறைத்து இருப்பது நல்ல விஷயம். திட்டமிட்ட பயணம் எந்த நேரத்திலும் மாற கூடியது. பெரும்பாலும் 30 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வோர் அதிகமாக உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தீர யோசித்து தான், ரயில்வே துறை இந்த முடிவு எடுத்து இருக்கும். புதிய நடைமுறையால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது. அனைவருக்கும் ரயில் டிக்கெட் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
முனிரத்னா, பின்னிபேட்.
இந்திய ரயில்வே மக்களுக்கு பாதுகாப்பான சேவை வழங்குகிறது. ஒருசில அசம்பாவிதங்கள் நடக்கலாம். ரயிலில் கட்டணம் குறைவு. பல நுாறு, ஆயிரம் கி.மீ., துாரம் பயணம் செய்பவர்கள், எந்த இடைஞ்சலும் இன்றி பயணிக்க வேண்டும் என்று நினைப்பர். இதனால் 120 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்கின்றனர். இதில் என்ன தவறு உள்ளது? முன்பதிவை 60 நாளாக குறைத்திருக்கக் கூடாது. ரயில்வே தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
பாஸ்கர், ஜெயநகர்
என் சொந்த ஊர் சென்னையின் அம்பத்துார். வேலை விஷயமாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை, பெங்களூரு வருகிறேன். பெங்களூரு - சென்னை இடையில் எவ்வளவு ரயில்கள் இயக்கப்பட்டாலும், தேவை குறைந்த பாடில்லை. 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்வதால், பலருக்கு டிக்கெட் கிடைப்பது இல்லை. 60 நாட்களுக்கு முன்பு முன்பதிவு என்றால், எல்லாருக்கும் டிக்கெட் கிடைக்கலாம் என்று நினைக்கிறேன்.
முத்துகுமார், தனியார் ஊழியர், சென்னை.