ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு; பயணிகளுக்கு ஷாக்
ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களாக குறைப்பு; பயணிகளுக்கு ஷாக்
UPDATED : அக் 17, 2024 02:12 PM
ADDED : அக் 17, 2024 02:10 PM

புதுடில்லி; ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை ரயில்வே நிர்வாகம் குறைத்திருப்பது பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்றாகும். இதனைப் பயன்படுத்தி நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர். பண்டிகை மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட கூடுதலாக பயணித்து வருகின்றனர்.
இதனால், பொதுமக்களின் வசதிக்காக, 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், அது வரையில், முந்தைய கால அவகாசமே இருக்கும் என்றும், முன்பதிவு செய்த டிக்கெட்டுக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக 365 நாட்களுக்கான முன்பதிவு கால அவகாசத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.