'கேரளாவில் ரயில் பாதை வளைவுகள் மூன்று மாதங்களில் சீரமைக்கப்படும்'
'கேரளாவில் ரயில் பாதை வளைவுகள் மூன்று மாதங்களில் சீரமைக்கப்படும்'
ADDED : மார் 11, 2024 11:15 PM

திருவனந்தபுரம்: 'கேரளாவில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க இருப்பு பாதைகளில் உள்ள வளைவுகள் மூன்று மாதங்களில் சீரமைக்கப்படும்' என ரயில்வே தெரிவித்துள்ளது.
கேரளாவில் மலை மற்றும் அதைச் சார்ந்த பகுதிகளில் உள்ள ரயில்வே இருப்பு பாதைகளில் ஏராளமான வளைவுகள் உள்ளன. இதனால், அந்த மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் குறைந்த வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. இந்தப் பாதைகளில் உள்ள வளைவுகள் சீரமைக்க வேண்டும் என, பல மாதங்களாக கோரிக்கை உள்ள நிலையில், அவை விரைவில் சரி செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் தப்லியால் நேற்று கூறியதாவது:
கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் கர்நாடகாவின் மங்களூரு இடையில் செல்லும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க, இருப்பு பாதைகளில் உள்ள மிக கடினமான வளைவுகளை நேராக்குவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. மூன்று மாதங்களில் அவற்றை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில் பாதைகளில் தற்போது ஒரு மணி நேரத்தில், 110 கி.மீ., வேகம் செல்ல அனுமதிக்கப்படுகிறது. வளைவு பாதைகளை சீரமைப்பதால், இந்த வேகம் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

