போர்வை கேட்ட ராணுவ வீரரை குத்திக்கொன்ற ரயில்வே ஊழியர்
போர்வை கேட்ட ராணுவ வீரரை குத்திக்கொன்ற ரயில்வே ஊழியர்
ADDED : நவ 08, 2025 02:23 AM
பிகானீர்: குஜராத்தை சேர்ந்த ராணுவ வீரர் ரயிலில் பயணித்த போது, போர்த்திப் படுக்க போர்வை கேட்டதால் ஏற்பட்ட தகராறில், அவரை ரயில்வே ஊழியர் கத்தியால் குத்தி கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
குஜராத்தின் சபர்மதி பகுதியை சேர்ந்தவர் ஜிகார் சவுத்ரி. ராணுவ வீரரான இவர் கடந்த, 2ம் தேதி பஞ்சாபின் பெரோஸ்பூரில் இருந்து ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ரயிலில் சபர் மதிக்கு புறப்பட்டார். அப்போது இரண்டாம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் பயணித்த சவுத்ரி போர்வை மற்றும் படுக்கை விரிப்பு தருமாறு ரயில்வே ஊழியர் ஜுபைர் மேனனிடம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்து சவுத்ரியிடம் சண்டையிட்டுள்ளார்.
இதையடுத்து, ரயில் ராஜஸ்தானின் பிகானீர் வந்ததும் மீண்டும் ஊழியர் மேனன் வந்து சவுத்ரியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கத்தியால் ராணுவ வீரர் சவுத்ரியை மேனன் குத்தி கொலை செய்து விட்டு தப்பினார்.
இது குறித்து டிக்கெட் பரிசோதகர் அளித்த புகாரின்படி கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் ரயில்வே ஊழியரான மேனன் ஒப்பந்த பணியாளர் என தெரியவந்தது. அவரை பணிநீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தேசிய மனித உரிமை கமிஷன், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை இயக்குநர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப் பியது.

