ரயில்வே அமைச்சகம் சுய விளம்பரத்துக்கான துறையாக மாறிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு
ரயில்வே அமைச்சகம் சுய விளம்பரத்துக்கான துறையாக மாறிவிட்டது: கார்கே குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 17, 2024 02:08 PM

புதுடில்லி: ரயில்வே அமைச்சகத்தை பா.ஜ., அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரியில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்து வேதனை அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம்.பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும்.
மோசம்
கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே அமைச்சகத்தின் தவறான நிர்வாகத்தில் பா.ஜ., அரசு ஈடுபட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தை பா.ஜ., அரசு சுய விளம்பரத்துக்கான துறையாக மாற்றிவிட்டது. இதனை, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக அடிக்கோடிட்டுக் காட்டுவது எங்களது கடமையாகும்.
ரயில்வே நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலையில் உள்ளது என்பதற்கு இன்று நடந்த விபத்தே சாட்சி. தொடர் ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும். ரயில் விபத்திற்கு பா.ஜ., அரசு பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.