அரசு தேர்வர்களிடம் பணம் வசூல் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது
அரசு தேர்வர்களிடம் பணம் வசூல் ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைது
ADDED : டிச 31, 2024 05:43 AM

பெங்களூரு: மாநில அரசில் பல்வேறு பணிகளுக்கு நடந்த தேர்வில் எழுதியவர்களை தொடர்பு கொண்டு, தேர்வில் தேர்ச்சி பெற வைப்பதாக கூறிய, தென்மேற்கு ரயில்வே தலைமை டிக்கெட் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவில் இம்மாதம் 28, 29ம் தேதிகளில் மாநில அரசு துறைகளில் பல்வேறு பதவிக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பங்கேற்றவர்களை, மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர், 'நீங்கள் எழுதிய தேர்வில் தேர்ச்சி பெற வைக்கிறேன். பி.டி.ஓ., பதவிக்கு எழுதியவர்களிடம் 25 லட்சம் ரூபாயும்; கே.ஏ.எஸ்., தேர்வுக்கு 50 லட்சம் ரூபாய்' எனவும் கேட்டுள்ளார்.
இது தொடர்பாக, தேர்வு எழுதியவர்களில் சிலர், பெங்களூரு விஜயநகர் போலீசில் புகார் அளித்தனர்.
விசாரணை நடத்திய போலீசார், விஜயநகரில் தேர்வரின் உறவினரை சந்திக்க அந்நபர் வருவதாக தகவல் கிடைத்தது. அவருக்கு காத்திருந்த போலீசார், அவர் வந்தவுடன் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, தென்மேற்கு ரயில்வே முதன்மை டிக்கெட் பரிசோதகர் கோவிந்தராஜு, 49, என்பது தெரியவந்தது.
அவரது மொபைல் போனில், 46 தேர்வர்களின் புகைப்படம், காசோலை, ஆவணங்களை கண்டுபிடித்தனர். யார் யார் பணம் கொடுத்தது என்று விசாரிக்கின்றனர்.
இது குறித்து பெங்களூரு மேற்கு பிரிவு டி.சி.பி., கிரிஷ் கூறியதாவது:
இம்மாதம் 28, 29ல் மாநில அரசின் பல துறைகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்றவர்களை தொடர்பு கொண்டுள்ளார். மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேர்வர்கள், அவரிடம் பேசி உள்ளனர்.
இதுவரை அவர் யாரையும் தேர்ச்சி பெற வைத்ததில்லை. தேர்ச்சி பெற வைப்பதாக நம்பிக்கை அளித்து, காசோலையை மட்டும் வாங்கி வந்துள்ளார். இதில் சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரிப்போம். குற்றம் சாட்டப்பட்டவருக்கும், தேர்வு ஆணையத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.