ஆள் மாறாட்டத்தில் ரயில்வே வேலை; மனைவியை 'போட்டு' கொடுத்த கணவன்
ஆள் மாறாட்டத்தில் ரயில்வே வேலை; மனைவியை 'போட்டு' கொடுத்த கணவன்
UPDATED : பிப் 11, 2025 07:40 AM
ADDED : பிப் 11, 2025 01:04 AM

ஜெய்ப்பூர்: மனைவிக்கு, 15 லட்சம் ரூபாய் கொடுத்து வேலை வாங்கி தந்தவர், மனைவி தன்னை விட்டு பிரிந்ததால், கடும் கோபம் அடைந்து ரயில்வே துறையில் புகார் அளித்தார். அதன் வாயிலாக, ரயில்வே தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது அம்பலத்துக்கு வந்துள்ளது.
ரயில்வே துறை பணியில் சேர, 'ரயில்வே ரெக்ரூட்மென்ட் போர்டு' நடத்தும் தேர்வை எழுத வேண்டும். இப்படி எழுதிய தேர்வில், ஆள் மாறாட்டம் செய்து மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது, தற்போது அம்பலமாகி உள்ளது.
ரயில்வேயில் தற்காலிக ஊழியரான, ராஜஸ்தான் மாநிலம், கோடாவைச் சேர்ந்த மணிஷ் மீனாவுக்கு, 2022-ல் திருமணமானது. தன் மனைவி ஆஷா மீனாவுக்கு, ரயில்வேயில் நிரந்தர வேலை வாங்கித் தர முடிவு செய்தார்.
ஆஷாவின் உறவினர் ஒருவர், ரயில்வே காவலரான ராஜேந்திரா என்பவரை அறிமுகப்படுத்தினார். மணிஷ், தன் நிலத்தை விற்று ராஜேந்திரா வாயிலாக ஜபல்புர் ரயில்வே அதிகாரிகளுக்கு, 15 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார்.
கடந்த 2022 ஆக., 30ல் ரயில்வே தேர்வு வாரியம் நடத்திய கிரேட் 4 தேர்வில், ஆஷாவுக்கு பதில் லட்சுமி என்ற பெண்ணை தேர்வு எழுதச் செய்து, ஆஷாவுக்கு வேலை கிடைத்தது.
வேலை கிடைத்த சில மாதங்களிலேயே, கணவனை வேலை இல்லாதவன் எனக் கூறி ஆஷா பிரிந்து விட்டார். மனைவியின் நம்பிக்கை துரோகத்தால் ஆவேசமான மணிஷ், மேற்கு மத்திய ரயில்வே துறையில் புகார் அளித்தார்.
ரயில்வே ஊழல் தடுப்பு பிரிவு நடத்திய விசாரணையில், மணிஷ் கூறியவை உண்மை என்றும், ஆஷாவுக்கு பதிலாக தேர்வு எழுதிய லட்சுமி, ஏற்கனவே பலருக்கு இதுபோன்று தேர்வு எழுதிக் கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய லட்சுமி, டில்லி போலீசில் பணிபுரிகிறார். மோசடியாக வேலை பெற்ற ஆஷா, அவருக்கு துணையாக இருந்த ராஜேந்திரா ஆகியோர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது. பெரிய அளவில் ரயில்வே பணி மோசடி வெளியாகும் என தெரிகிறது.