பண்டிகை கால ரயில் டிக்கெட் முன்பதிவில்... 20 சதவீத அதிரடி தள்ளுபடி!
பண்டிகை கால ரயில் டிக்கெட் முன்பதிவில்... 20 சதவீத அதிரடி தள்ளுபடி!
UPDATED : ஆக 10, 2025 03:28 AM
ADDED : ஆக 10, 2025 02:11 AM

புதுடில்லி: 'தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் முன்பதிவு செய்யப்படும் ரயில் டிக்கெட்களில், 'ரிட்டர்ன் டிக்கெட்'டுக்கு, 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்' என, ரயில் பயணியருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுதும் அடுத்து வரும் மாதங்களில் விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் என வரிசையாக பண்டிகைகள் வர இருக்கின்றன.
இதனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் தென்மாவட்ட மக்கள், வழக்கம் போல சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகைகளை கொண்டாட திட்டமிடுவர்.
எளிதானதல்ல இதனால் பண்டிகை காலங்களில் வழக்கமான ரயில்கள் மட்டுமின்றி, சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்து விடும்.
இதனால் டிக்கெட் கிடைக்காத பயணியர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். அதே போல், சொந்த ஊரில் இருந்து திரும்பும்போதும் ரயில் டிக்கெட் எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல.
இந்நிலையில், கடைசி நேர ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் ரயில்வே துறை புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அதன்படி தீபாவளி பண்டிகைகளுக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பும் பயணியர், 'ரிட்டன் டிக்கெட்'டையும் சேர்த்து முன்பதிவு செய்தால், அதில் 20 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
அதாவது வரும் அக்., 13 முதல் அக்., 26ம் தேதி வரையிலான பண்டிகை கால ரயில் பயணத்திற்காக, முதலில் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும். இரு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் திட்டத்தின்படி இந்த டிக்கெட்டுக்கான முன்பதிவு வரும் ஆக., 14 முதல் துவங்குகிறது.
அதே நேரம், 'ரிட்டன் டிக்கெட்டு'க்கான முன் பதிவு நவ., 17 முதல் டிச., 1ம் தேதிக்குள் எடுத்துக் கொள்ளலாம், என ரயில்வே அமைச்சகம் அறிவித்திருக்கிறது.
ரிட்டன் டிக்கெட் இதற்கு இரு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் கால வரம்பு பொருந்தாது என தெரிவித்துள்ளது.
அதாவது அக்., 13 முதல் அக்., 26ம் தேதி வரையிலான ரயில் பயண டிக்கெட் முன்பதிவின் போதே, ரிட்டன் டிக்கெட்டையும் சேர்த்து பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
சொந்த ஊர்களில் இருந்து திரும்ப பயணியர் முண்டியடிப்பதை தவிர்க்கும் வகையில் ரிட்டன் டிக்கெட்டுக்கான முன் பதிவு தேதி ஒரு மாதத்திற்கு தள்ளி அறிவித்துள்ளது. இதனால், இது பயணியருக்கு எப்படி பயன்தரும் என தெரியவில்லை.
மேலும், நவ., 17 முதல் டிச., 1ம் தேதி வரையிலான ரிட்டன் டிக்கெட் எடுத்திருந்தால் மட்டுமே 20 சதவீத தள்ளுபடி கிடைக்கும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டத்தின்படி புறப்பாடும், திரும்புதலிலும், அதே பெயர் கொண்ட பயணியர் இடம் பெற்றால் மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். 20 சதவீத தள்ளுபடி என்பது திரும்பும்போது மட்டுமே, அதுவும் அடிப்படை கட்டணத்தில் இருந்து வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் புறப்படும் இடம், சேரும் இடம், பயணிக்கும் வகுப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் இருக்கக்கூடாது.
தவிர ராஜ்தானி, ஷதாப்தி, துரந்தோ போன்ற ரயில்களுக்கு இந்த தள்ளுபடி பொருந்தாது எனவும் ரயில்வே துறை அறிவித்துள்ளது.