ADDED : செப் 13, 2011 01:28 PM
புதுடில்லி: ரயில்வேத்துறையில் உற்பத்தித்திறன் சார்ந்த ரயில்வே தொழிலாளர்களுக்கு (பி.எல்.பி) விழாக்கால சலுகையாக 78 நாட்களுக்கான போனஸ் தொகையினை வழங்க உள்ளது. இந்திய ரயில்வே தற்போது நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது எனினும் இந்திய ரயில்வே துறையில் உற்பத்தித்திறன் சார்ந்த பிரிவுகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு இந்தாண்டிற்கு 78 நாட்கள் போனஸ் வழங்கப்படவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான மத்திய அமைச்சரவைக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டப்பின்னர் இத்தொகை வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த போனஸ் அறிவிப்பால் 13.26 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவர்.இது குறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு இதே பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 77 நாட்களுக்கான போனஸ் வழங்கப்பட்டது. இந்தாண்டு 78 நாட்கள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. போனஸ் தொடர்பான அறிக்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு ரயில்வே ஊழியர் அதிகபட்சமாக ரூ. 8ஆயிரத்து 975 போனஸ் பெறுவார். இவ்வாறு அந்த வட்டாரஙகள் கூறின.
இதுதொடர்பாக இந்திய ரயில்வே தொழிலாளர்களின் தேசிய கூட்டமைப்பின் பொதுச்செயலர் ராகவைய்யா கூறுகையில், ரயில்வேத்துறையின் நிதிநிலைமை நன்றாகத்தான் உள்ளது. இந்த ஆண்டு உற்பத்தித்துறையில் அதிக வேலைபளு ஏற்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு உற்பத்திபொருட்கள் மதிப்பு 876 மில்லியன் டன்னாக இருந்தது. இந்தாண்டு (2011-ம் ஆண்டு மார்ச் 11-ம் தேதி வரையிலான விவரப்படி உற்பத்தி பொருட்களின் அளவு 924 டன்னாக அதிகரித்துள்ளது. எனவே எங்களுக்கு 80 நாட்களுக்கான போனஸ் தொகை வழங்கிட வேண்டும்.பாசஞ்சர் ரயில்களுக்கான கட்டணத்தை உயர்த்த வேண்டும். ரயில்வே ஊழியர்களுக்கான இந்தாண்டு பென்ஷன் தொகை ரூ. 7 ஆயிரத்து 953 கோடியிலிருந்து, 16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது என்றார்.