sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை; 'கரண்ட் கட்'டால் பெங்களூரு பொதுமக்கள் அவதி

/

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை; 'கரண்ட் கட்'டால் பெங்களூரு பொதுமக்கள் அவதி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை; 'கரண்ட் கட்'டால் பெங்களூரு பொதுமக்கள் அவதி

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெளுத்து வாங்கியது மழை; 'கரண்ட் கட்'டால் பெங்களூரு பொதுமக்கள் அவதி


ADDED : மே 03, 2024 11:19 PM

Google News

ADDED : மே 03, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : வெயிலின் தாக்கத்தில் இருந்து விடுதலை பெறும் வகையில், 163 நாட்களுக்கு பின், பெங்களூரின் பல பகுதிகளில் நேற்று நல்ல மழை பெய்தது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடகாவில் கடந்தாண்டு, தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால், மாநிலத்தின் 223 தாலுகாக்களில் கடும் வறட்சி நிலவுகிறது. ஆறு, அணை, ஏரி உட்பட நீர் நிலைகளில் தண்ணீர் வற்றியுள்ளது. ஆழ்துளைக் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை.

* ஓக்லிபுரம் 8 வழிச்சாலை

பெங்களூரில் கடைசியாக, 2023 நவம்பர் 21ம் தேதி மழை பெய்தது. அதன் பின், ஐந்தரை மாதங்களுக்கு பின், நேற்று மாலை மிதமான மழை பெய்தது. பல இடங்களில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது.

நகரின் ஜெயநகர், மாருதி மந்திரா, ஹம்பிநகர், பிதரஹள்ளி, ஆவலஹள்ளி, ராஜாஜிநகர், சிவாஜிநகர், இந்திராநகர், எச்.ஏ.எல்., மாரத்தஹள்ளி, நாயண்டஹள்ளி, காக்ஸ்டவுன், எச்.எஸ்.ஆர்., லே - அவுட், ராஜாஜிநகர், எலஹங்கா, கே.ஆர்., மார்க்கெட், பொம்மனஹள்ளி, ஒயிட்பீல்டு உட்பட பல பகுதிகளில் பெய்த மழையால், பெங்களூரில் 1.72 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

ஓக்லிபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 8 வழிச்சாலை சுரங்க பாலத்தில், நான்கடி உயரத்துக்கு மழைநீர் தேங்கியது. வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, தேங்கிய தண்ணீர் செல்வதற்கு வசதி செய்தனர்.

* 10 மரங்கள் சாய்ந்தன

நகரின் ஸ்ரீநகர், பத்மநாபநகர், பனசங்கரி, விஜயநகர், சங்கராபுரம் உட்பட பத்து இடங்களில் மரங்கள் விழுந்திருப்பதாக பெங்., மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்தன. வனப்பிரிவு ஊழியர்கள் அவற்றை அகற்றி, போக்குவரத்துக்கு வசதி செய்தனர்.

விஜயநகர் பஸ் நிலையம் அருகில், ஸ்கூட்டர் மீது மின்கம்பம் சாய்ந்தது. பேட்ராயனபுராவில் ஒரு பெட்டி கடையின் மேற்கூரை பறந்து, வாகனங்கள் மீது விழுந்தது. அதிர்ஷ்டவசமாக எவ்விதமான அசம்பாவிதமும் நடக்கவில்லை.

ஹொஸ்கோட்டில், மழைக்கு மரத்தடியில் நின்றிருந்த ரத்னம்மா, 64, என்ற பெண் மின்னல் தாக்கி அதே இடத்தில் உயிரிழந்தார். அருகில் கொட்டகையில் இருந்த 20 ஆடுகளும் இறந்தன.

பெங்களூரின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

* காவிரியில் வெள்ளம்

இதுபோன்று, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, மைசூரு, மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய மாவட்டங்களிலும் நேற்று மழை பெய்தது.

குடகின், குஷால்நகர், சுண்டிகொப்பா, மடிகேரி கோணிகொப்பலு, பொன்னம்பேட்டை, பேகூர், விராஜ்பேட்டை உட்பட பல பகுதிகளில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது.

நேற்று மதியம் வரை துபாரே பகுதியில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை. மழை பெய்த பின், மாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

* மைசூரில் அதிகபட்சம்

மாநிலத்திலேயே மைசூரில் தான் அதிகபட்சமாக 5.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பிலிகெரே, கே.ஆர்., நகர், பிரியாப்பட்டணா, ஹுன்சூர், டி.நரசிபுரா, நஞ்சன்கூடு, பெட்டதபுரா உட்பட மாவட்டம் முழுதும் மழை பெய்தது.

நகரில் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வாகனங்கள் மீது மரங்கள் விழுந்ததால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

மழையால் ஏற்பட்ட சேற்றில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சிக்கிக் கொண்டது. பயணியரை இறக்கிவிட்டு, பின் பஸ் இயக்கப்பட்டது. பின்னர், பயணியர் மீண்டும் ஏற்றிக் கொள்ளப்பட்டனர்.

* விவசாயிகள் மகிழ்ச்சி

மைசூரின் ஹம்பாபுரத்தில் மின்னல் தாக்கி, தென்னை மரத்தில் தீப்பிடித்து எரிந்தது. துாரத்தில் இருந்து பார்க்க மக்கள், மொபைல் போனில் படம், வீடியோ பதிவு செய்தனர்.

மாண்டியாவிலும் 1 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. பெங்களூரு மற்றும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் இரண்டு வாரம் தொடர்ந்து மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த நிலையில், மழையால் விவசாயிகளும், மக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இரவில் குளிர்ச்சியாக இருந்தது.

* தங்கவயல்

தங்கவயல், பேத்தமங்களா, கேசம் பள்ளி, சுந்தரபாளையம், பங்கார்பேட்டை, பூதிக்கோட்டை, உலகமதி, டி.கே., ஹள்ளி மற்றும் கோலார், மாலுார் ஆகிய இடங்களிலும் கோடை மழை பெய்தது. வானம் மேகமூட்டமாகவே காணப் பட்டது. தங்கவயல், பேத்தமங்களாவில் ஆலங்கட்டி மழை பெய்தது.






      Dinamalar
      Follow us