ADDED : ஏப் 23, 2025 03:47 AM
அகர்தலா; திரிபுராவில் பெய்த கனமழையால் 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன; பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, திரிபுராவின் மோகன்பூர், கோமதி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.
ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சாய்ந்ததால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கனமழையால், கோமதி மாவட்டத்தின் கர்பூக் பகுதியில் ஒரு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், இரண்டு பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், இடிபாடுகளில் சிக்கிய இருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதற்கிடையே, திரிபுராவில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும், மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

