மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் விறுவிறு : மாநகர் முழுதும் முதல்வர் ரேகா ஆய்வு
மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள் விறுவிறு : மாநகர் முழுதும் முதல்வர் ரேகா ஆய்வு
UPDATED : ஏப் 20, 2025 02:22 PM
ADDED : ஏப் 18, 2025 09:22 PM

புதுடில்லி:“மழைக் காலத்தில் சாலைகளில் வெள்ளம் தேங்குவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநகர் முழுதும் மழைநீர் தேங்கும் 194 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களில் மழைநீர் வடிகால்வாய்களை சீரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன,”என, முதல்வர் ரேகா குப்தா கூறினார்.
தலைநகர் டில்லியில் கடந்த ஆண்டுகளில் மழைக் காலத்தில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், கடந்த ஆண்டு சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதற்கு, மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பதே காரணம் என கூறப்பட்டது.
இந்நிலையில், முதல்வர் ரேகா, பொதுப்பணித் துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா ஆகியோர், மழைக்காலத்துக்குள் செய்ய வேண்இய ஏற்பாடுகள் குறித்து மாநகர் முழுதும் ஆய்வு செய்தனர்.
அதிகளவு வெள்ளம் தேங்கும் மின்டோ பிரிட்ஜ் சுரங்கப்பாதையை ஆய்வு செய்த பின்,முதல்வர் ரேகா குப்தா, நிருபர்களிடம் கூறியதாவது:
மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கும் இடங்களை மாநகர் முழுதும் ஆய்வு செய்து வருகிறோம். அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
மின்டோ பிரிட்ஜ் சுரங்கப் பாதையில்தான்ப் மழைக்காலத்தில் அதிகளவு தண்ணீர் தேங்குகிறது. இங்கு தேங்கும் வெள்ளத்தை வெளியேற்ற தானியங்கி பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 2.5 கி.மீ., நீள குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, மின் மோட்டார் ஆபரேட்டர்கள் 24 மணி நேரமும் சுழற்றி முறையில் பணியில் இருப்பர்.
மாநகர் முழுதும் மழைநீர் தேங்கும் 194 இடங்கள் கடந்த ஆண்டு போலீசால் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தப் பகுதிகளில் இந்த ஆண்டு வெள்ளம் தேங்காமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
வடிகால்களை தூர்வாரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தேவைப்படும் இடங்களில் கூடுதல் மோட்டார் பம்ப் நிறுவுதல் மற்றும் கூடுதல் பம்ப் ஆபரேட்டர்களை நியமித்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாகவே வெள்ளம் தேங்கும் முதல் 10 இடங்களில் உலக சுகாதார மைய கட்டடத்துக்கு அருகிலுள்ள ரிங் ரோடு உட்பட அனைத்து இடங்களிலும் மழைநீர் வடிகால்வாய்களை ஆய்வு செய்துள்ளோம். அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வு முடிந்த பின், மின்சாரம், சுகாதாரம், பொதுப்பணி, போக்குவரத்து, டில்லி மாநகராட்சி, புதுடில்லி மாநகராட்சி கவுன்சில் மற்றும் ஜல் போர்டு உள்ளிட்ட துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ரேகா குப்தா ஆலோசனை நடத்தினார்.
போக்குவரத்து நெரிசல், மின் தடை, நோய்த் தொற்று பரவுதல் உட்பட மழைக்காலத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.
நெரிசல் ஏற்படும் 233 இடங்களில் பெரும்பாலானவை பொதுப்பணித் துறையின் கீழ் உள்ளன. அங்கு செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதன்பின், நிருபர்களிடம் அமைச்சர் பர்வேஷ் வர்மா கூறியதாவது:
அனைத்து துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளம் தேங்குதல், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சீரமைப்புப் பணிகளை முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தலைநகர் டில்லியில் எந்தப் பகுதியிலும் வெள்ளம் தேங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அனைத்துத் துறைகளும் தங்கள் பணிகளை சரியான நேரத்தில் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகர் முழுதும் நடக்கும் சீரமைப்புப் பணிகள் தினமும் கண்காணிக்கப்படும். புதிய வடிகால் கட்ட ஓராண்டு வரை ஆகும். எனவே, இந்த மழைக்காலத்தில் தண்ணீர் தேங்காமல் தடுக்க அனைத்து வடிகால்வாய்களிலும் தூர் வாரும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.