லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் பணி ஓராண்டில் நிறைவேற்றம்
லட்சுமி வெங்கட்ரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் பணி ஓராண்டில் நிறைவேற்றம்
ADDED : மார் 10, 2024 06:29 AM

தங்கவயல்: ''ராபர்ட்சன்பேட்டை லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் பணிகள் ஓராண்டுக்குள் நிறைவேற்றப்படும்,'' என, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா தெரிவித்தார்.
-ராஜகோபுரம் லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவில் ராஜகோபுர பணிகள் துவக்கத்துக்காக கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதன் பின், பிரம்மோற்சவ விழா குழுவினருடன் எம்.எல்.ஏ., ரூபகலா ஆலோசனை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:
நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஹிந்து அறநிலையத் துறைக்கு உட்பட்ட, லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டும் என்பது பலரின் நீண்ட கால கனவு. இதை நிறைவேற்ற கடவுளின் பாக்கியம் இப்போது கிடைத்துள்ளது. இதற்கான பூஜை நடந்து உள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் நடத்தப்படுவதால், ராஜகோபுர பணிகள் ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.
பேத்தமங்களா வெங்கடேச பெருமாள் கோவில், கேசம்பள்ளி மடிவாளா கிராமத்தில் உள்ள சோழர் காலத்து சோமேஸ்வரர்கோவில் புதுப்பிக்க தேவையான நிதி ஒதுக்கப்படும்.
தங்கவயல் தொகுதிக்கு முதல்வரின் சிறப்பு நிதி வழங்க கோரினேன். இதை ஏற்ற முதல்வர் சித்தராமையா, 25 கோடி ரூபாய் வழங்கி உள்ளார். இதில், பொதுப் பணித் துறைக்கு, 5 கோடி ரூபாய்; சமூக நலத்துறைக்கு, 6 கோடி ரூபாய்; ஹிந்து அறநிலையத் துறைக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நகராட்சி முன்னாள் தலைவர்கள் வி.முனிசாமி, கே.சி.முரளி, பிரம்மோற்சவ விழா கமிட்டியில் உள்ள ஜெயபால், முனிரத்தின நாயுடு, ஜி.எஸ்.கார்த்திக், அனந்தகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், லட்சுமி நாராயணா உட்பட பலர் பங்கேற்றனர்.
� லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில், ராஜகோபுரம் கட்டுவது குறித்து நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏ., ரூபகலா பங்கேற்றார். � ராஜகோபுரம் அமைப்பதற்காக சிறப்பு பூஜை நடந்தது.

