பாலைவன பூமியில் பாய்ந்தோடிய வெள்ளம்! ராஜஸ்தானில் போர்வெல் போடும்போது அதிசயம்
பாலைவன பூமியில் பாய்ந்தோடிய வெள்ளம்! ராஜஸ்தானில் போர்வெல் போடும்போது அதிசயம்
ADDED : டிச 31, 2024 01:05 PM

ஜெய்சால்மர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போர்வெல் போடும்போது 3 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து வெள்ளம் போல பாய்ந்து ஓடும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜெய்சால்மர் பகுதியில் வசித்து வருபவர் விக்ரம் சிங். இவருக்கு சொந்தமான நிலத்தில் போர் போடும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட 850 அடி ஆழத்துக்கு போர் போடப்பட்டு கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பலத்த ஓசையுடன், நிலத்தில் இருந்து தண்ணீர் கொப்பளிக்க ஆரம்பித்தது. தண்ணீர் இருப்பு கண்டுபிடித்தாகிவிட்டது என்று அனைவரும் எண்ணிய வேளையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
சுமார் 3 அடி உயரத்துக்கு பெரும் சத்தத்துடன் வெள்ளம் போல பூமிக்குள் இருந்து தண்ணீர் சீறி பாய ஆரம்பித்தது. இந்த வெள்ளத்தில் போர்வெல் போட பயன்படுத்திய இயந்திரங்கள் சிக்கின. அவற்றை மீட்க முடியாத சூழலும் எழுந்தது.
தொடர்ந்து பூமியில் இருந்து ஊற்றாக கிளம்பி, வெள்ளமென பாய்ந்தோடும் நீரின் காரணமாக, அந்த வயல்வெளியே தண்ணீர் தேசமாக மாறி போனது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்திருக்க, பாலைவன பூமியில் இப்படி ஒரு அதிசயமா என்று ஊர்மக்கள் ஆச்சரியம் அடைந்து அங்கே திரள ஆரம்பித்தனர்.
இதுகுறித்து வருவாய்துறையினருக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ பகுதிக்குச் சென்ற அதிகாரிகள் அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பூமியில் இருந்து நீர் பிய்ச்சியடித்தபடி வெள்ளமாய் பொங்கி கொண்டிருக்க நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து மாவட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.
பாலைவன பூமியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் என்ற தகவலை அறிந்த சுற்றுவட்டார மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர். இதையடுத்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் இருந்து 500 மீட்டர் சுற்றளவுக்கு மனிதர்களோ, கால்நடைகளோ நடமாட தடை விதித்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். அந்த பகுதியில் தற்காலிகமாக காவல்துறை சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த அதிசய சம்பவம் குறித்து சேர்ந்த நீரியல் நிபுணர்கள் கூறியதாவது; இந்த இடம், பழமையான சரஸ்வதி நதி நீரோட்டம் பெற்ற பகுதியாக இருக்கலாம் என்று பலரும் கருதுகின்றனர். அது பற்றிய எந்த ஆய்வு முடிவும் எங்களிடம் இல்லை. தற்போதும் தண்ணீர் நிற்காமல் பூமிக்குள் இருந்து பொங்கியபடியே இருக்கிறது. தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.