அரசுப்பள்ளிகளில் தினமும் இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்; ராஜஸ்தானில் உத்தரவு
அரசுப்பள்ளிகளில் தினமும் இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்; ராஜஸ்தானில் உத்தரவு
UPDATED : ஜன 03, 2026 04:30 PM
ADDED : ஜன 03, 2026 11:02 AM

நமது நிருபர்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் தினமும், இனி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிப்பு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு பல்வேறு தரப்பினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
நடப்பு நிகழ்வுகள் குறித்து தெரிந்து கொள்ளவும், வாசிப்பு பழக்கத்தை வலுப்படுத்தவும், மாணவர்களிடையே மொழித்திறனை மேம்படுத்தவும், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், தினசரி 10 நிமிடம் செய்தித்தாள் வாசிக்க வேண்டும் என்ற நடைமுறையை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. ஒவ்வொரு மேல்நிலைப் பள்ளியிலும் குறைந்தது தினமும் இரண்டு செய்தித்தாள்கள் வாங்க வேண்டும்.
அது ஒன்று ஆங்கில மொழியிலும், மற்றொன்று ஹிந்தி மொழியிலும் இருக்க வேண்டும். காலையில் பிரார்த்தனைக் கூட்டத்தின் போது செய்தித்தாளை வாசிக்க வேண்டும். இது குறித்து பள்ளிக்கல்வி துறை செயலாளர் கிருஷ்ணா குணால் அரசு பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தலையங்கங்கள், விளையாட்டு, தேசிய மற்றும் உலக செய்திகளை படிக்க வேண்டும்.
காலையில் பிராரத்தனை கூட்டத்தின் போது அன்றைய தினம் செய்தித்தாள் வாசிக்கும் மாணவர் பள்ளிக்கு 30 நிமிடங்களுக்கு முன்பே வந்து தயாராக வேண்டும். மாணவர்களுக்கு தினமும் கூடுதலாக 5 புதிய சொற்கள் மற்றும் அவற்றின் விளக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கிய தலையங்கங்கள் மற்றும் செய்திகளை படிக்கும் பொறுப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன பலன்?
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: இந்த புதிய நடைமுறை மாணவர்களிடம் செய்திகளை படித்து தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை தூண்டும். அவர்கள் பொது அறிவை வளர்த்து கொள்ள பேருதவியாக இருக்கும். மாணவர்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வை மேம்படுத்தும். மாணவர்களை விழிப்புணர்வு, சிந்தனை மற்றும் தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவதற்கான முக்கியமான முயற்சி இது. இந்த முயற்சி மாணவர்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

