மகா கும்பேளாவில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு
மகா கும்பேளாவில் ராஜ்நாத் சிங் சுவாமி தரிசனம்; திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு
ADDED : ஜன 18, 2025 07:39 PM

பிரயாக்ராஜ்; உத்தரபிரதேசத்தில் கும்பமேளாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் புனித நீராடி வழிபட்டார்.
இந்துக்களின் பெருவிழாவாக கருதப்படும் மகா கும்பமேளா விழா, உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கியது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்து வருகின்றனர். பிப்ரவரி 26ம் தேதி வரை இந்த விழா நடக்கும் என்பதால், கோடிக்கணக்கானோர் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்கள் எந்த தடையுமின்றி கடவுளை தரிசனம் செய்ய வசதியாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
விழாவின் 6வது நாளான இன்றும் பக்தர்களின் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். அதைத் தொடர்ந்து, அக்ஷயவாத், படல்புரி கோவில், சரஸ்வதி குந்த் மற்றும் ஹனுமன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.