விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்
விண்வெளி வீரர் சுக்லாவை அவமதித்த எதிர்க்கட்சிகளுக்கு ராஜ்நாத் கண்டனம்
ADDED : ஆக 19, 2025 05:43 AM

புதுடில்லி: இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில், பார்லி.,யில் நேற்று சிறப்பு விவாதம் நடந்தது. அதை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கோபமடைந்த ராணுவ அ மைச்சர் ராஜ்நாத் சிங், 'எதிர்க்கட்சிகளின் நடத்தை மிகவும் ஏமாற்றமளிக் கிறது' என குறிப்பிட்டார்.
அமெரிக்காவின், 'ஆக்சியம் 4' திட்டத்தின் கீழ், இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட நான்கு பேர், ஜூன் 25ல், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றனர்.
இதன் மூலம், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். 18 நாட்கள் விண்வெளியில் தங்கி ஆய்வு செய்த அவர்கள், ஜூலை 15ல் பூமிக்கு திரும்பினர். இந்த பயணத்துக்கு பின், இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா சமீபத்தில் தாயகம் திரும்பினார்.
இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணத்தை கவுரவிக்கும் வகையில் சிறப்பு விவாதம் நடந்தது. அப்போது, தேர்தல் கமிஷனை கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்தன.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பேசுகையில், ''அரசின் மீது எதிர்க்கட்சிகளுக்கு கோபம் இருக்கலாம். ஆனால் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திய வீரரை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பது, மிகவும் வருத்தம் அளிக்கிறது,'' என்றார்.
இதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தே.ஜ., கூட்டணி எம்.பி.,க்கள் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவை பாராட்டி பேசினர். பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
நம் விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளி பயணம் குறித்து, லோக்சபாவில் சிறப்பு விவாதம் நடந்த போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டது, மிகவும் துரதிருஷ்டவசமானது.
முக்கியத்துவம் வாய்ந்த விவாதத்தை தடுக்க எதிர்க்கட்சிகள் நடந்து கொண்ட விதம் மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. விண்வெளி போன்ற முக்கியமான விவகாரங்களில், அரசியலை புகுத்தக் கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.