ராஜ்யசபா காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு பதவிக்காலம் முடிந்த இருவருக்கு வாய்ப்பு
ராஜ்யசபா காங்., வேட்பாளர்கள் அறிவிப்பு பதவிக்காலம் முடிந்த இருவருக்கு வாய்ப்பு
ADDED : பிப் 15, 2024 06:41 AM

பெங்களூரு : ராஜ்யசபா தேர்தலுக்கு, கர்நாடக காங்கிரஸ் வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். காங்., பொருளாளர் அஜய் மக்கன் மற்றும் தற்போது பதவி காலம் நிறைவு பெறும் இருவருக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இருந்து, ராஜ்யசபா எம்.பி.,க்களான பா.ஜ.,வின் ராஜிவ் சந்திரசேகர், காங்கிரசின் ஜி.சி.சந்திரசேகர் ஆகியோரது பதவி காலம், வரும் ஏப்ரல் 2ம் தேதியும்; காங்கிரசின் ஹனுமந்தையா, சையத் நாசிர் உசேன் ஆகியோரது பதவி காலம், ஏப்ரல் 3ம் தேதியும் நிறைவு பெறுகிறது.
இந்த நான்கு எம்.பி., பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம் 8ம் தேதி துவங்கியது. சுயேச்சை வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மட்டுமே நேற்று வரை மனு தாக்கல் செய்த ஒரே வேட்பாளர் ஆவார்.
நான்கில், காங்கிரஸ் 3, பா.ஜ.,வுக்கு 1, எம்.பி., பதவி கிடைக்கும். அதன் அடிப்படையில், பா.ஜ., சார்பில் நாராயண கிருஷ்ணாச பந்தகே வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
மனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், நேற்று தான் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். காங்கிரஸ் தேசிய பொருளாளர் அஜய் மக்கன் கர்நாடகாவில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பதவி காலம் நிறைவுபெறும் சையத் நாசிர் உசேன், ஜி.சி.சந்திரசேகர் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.பா.ஜ., காங்கிரஸ் இரண்டு கட்சி வேட்பாளர்களும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
நாளை மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்கள் திரும்ப பெறுவதற்கு வரும் 20ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால், 27ம் தேதி காலை 9:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும்.

