ராஜ்யசபா காங்., எம்.பி., சீட்டுக்கு அடியில் 500 ரூபாய் கட்டு
ராஜ்யசபா காங்., எம்.பி., சீட்டுக்கு அடியில் 500 ரூபாய் கட்டு
UPDATED : டிச 06, 2024 11:32 PM
ADDED : டிச 06, 2024 11:29 PM

ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டிருந்த இடைவேளை நேரத்தில், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நேற்று முன்தினம் நடந்த வழக்கமான சோதனையின் போது, காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்வியின் இருக்கைக்கு அடியில், கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பார்லிமென்ட் நடவடிக்கைகள் ஒவ்வொரு நாளும் ஒத்திவைக்கப்படும் இடைவெளியிலும், அன்றைய அலுவல்கள் முடிந்த பிறகும், பாதுகாப்பு காரணங்களுக்காக சபை முழுதும் சோதனை நடத்தப்படுவது வழக்கம்.
இதன்படி, ராஜ்யசபா நேற்று முன்தினம் ஒத்தி வைக்கப்பட்ட இடைவெளியில் பாதுகாவலர்கள் சோதனை நடத்தினர்.
சோதனை
அப்போது, ஒரு இருக்கையின் கீழ், 500 ரூபாய் நோட்டுகள் கட்டுகட்டாக கிடப்பதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டெடுத்தனர். அதை, ராஜ்யசபா செயலகத்தில் முறைப்படி ஒப்படைத்தனர். ராஜ்யசபா நேற்று கூடியதும், இந்த விவகாரம் பகிரங்கமாக வெடித்தது.
வழக்கமான, 'ஜீரோ' நேர அலுவல்கள் துவங்கப்போகின்றன என அனைவரும் எதிர்பார்த்த வேளையில், சபை தலைவர் ஜக்தீப் தன்கர், “ராஜ்யசபாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக வழக்கமாக நடக்கும் சோதனை நேற்று முன்தினம் நடந்தபோது, 222ம் எண் இருக்கையின் கீழ் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டெடுக்கப்பட்டுஉள்ளது.
“அது, காங்கிரஸ் கட்சி சார்பில், தெலுங்கானாவில் இருந்து எம்.பி.,யாக தேர்வாகி வந்துள்ள அபிஷேக் மனு சிங்வியின் இருக்கை. இதுகுறித்து, உரிய விசாரணை நடக்கிறது,” என்றார்.
இதையடுத்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனை செய்வது வழக்கம் தான். ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணை மேற்கொள்வதையும் வரவேற்கிறோம்.
''ஆனால், விசாரணை முடிவதற்கு முன்பாகவே சம்பந்தப்பட்ட இருக்கைக்குரிய எம்.பி.,யின் பெயரை எதற்காக சபையில் அறிவிக்க வேண்டும்? இதை ஏற்க முடியாது,” என்றார்.
கூச்சல்
இதற்கு, பா.ஜ., - எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'தங்கள் ரகசிய நடவடிக்கைகளையும், சந்தேகத்துக்கிடமான விஷயங்களையும் மறைக்கும் கட்சி காங்கிரஸ். எனவே தான், தங்கள் கட்சி எம்.பி., பெயரை சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்' எனக் கூறவும், கூச்சல் குழப்பம் ஆரம்பமானது.
அதற்கு பதிலடியாக பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “உண்மைகளை மறைக்கும் வழக்கம் பா.ஜ.,வுக்கு தான் உண்டு. 'பெகாசஸ், ஹிண்டன்பர்க்' என எல்லா விஷயங்களிலும் உண்மைகளை அமுக்கக் கூடியவர்கள் நீங்கள்,” என்றார். இதை தொடர்ந்து சபையில் கூச்சல் அதிகரித்தது.
அமளி
அப்போது சபை முன்னவரும், சுகாதாரத்துறை அமைச்சருமான நட்டா, “இது மிகவும் முக்கியமான விவகாரம். சபையின் கண்ணியத்தை பாதித்து உள்ளது.
''இந்த சபையில் இதுபோன்ற செயல்கள் நடப்பது கவலை அளிக்கிறது. முழு விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்,” என்றார்.
இந்த கூச்சல் குழப்பத்திலேயே அரை மணிநேரம் கழிந்துவிட, அதன்பின் அலுவல்கள் நடந்தன.
இருப்பினும் கேள்வி நேரத்தின்போது தி.மு.க., - எம்.பி., சிவா பேசுகையில், “தமிழகத்தில் வெள்ளப் பாதிப்புகள் பெரிய அளவில் உள்ளன.
''மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் வெகு தீவிரமாகவும் சிறப்பாகவும் இருந்தபோதிலும், அது மட்டுமே போதாது என்ற நிலை உள்ளது. எனவே, வெள்ள நிவாரண நிதியாக 2,000 கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்க வேண்டும்,” என்றார்.
மதியத்துக்கு மேல் நடந்த அலுவல்களின்போது அமளி ஏற்படவே, ராஜ்யசபா ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் அலுவல்கள் துவங்கிய சில நிமிடங்களிலேயே அனல் பறந்தது. காங்கிரஸ் எம்.பி., வேணுகோபால், “எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் குறித்து, பா.ஜ. - எம்.பி.,க்கள் அவதுாறான வகையில் பேசியுள்ளனர். இதை ஏற்க முடியாது. அவர்கள் மீது நடவடிக்கை தேவை,” என்றார்.
ஒத்திவைப்பு
பா.ஜ., - எம்.பி.,க்கள் சம்பித் பத்ரா மற்றும் நிஷிகாந்த் துபே ஆகிய இருவருக்கும் எதிராக, காங்கிரஸ் எம்.பி.,க்கள் குரல் எழுப்பினர். இதற்கு, பா.ஜ., எம்.பி.,க்கள் பதிலடி தரத் துவங்கினர்.
சபையில் கடும் வாக்குவாதம் எழுந்ததும், சபாநாயகர் ஓம் பிர்லா கோபத்துடன் சபையை ஒத்திவைப்பதாக கூறி எழுந்து சென்றுவிட்டார்.
மீண்டும் 12:00 மணிக்கு சபை கூடியபோதும் அதே பிரச்னை கிளம்பவே, நாள் முழுதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, காலை 10:30 மணிக்கு பார்லிமென்ட் நுழைவாயில் அருகே, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. தங்கள் வாயை மூடியிருக்கும் வகையில், முக கவசம் அணிந்தபடி அவர்கள் வந்திருந்தனர்.
- நமது டில்லி நிருபர் -