ADDED : ஆக 07, 2024 03:29 PM

புதுடில்லி: ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட 9 மாநிலங்களில் காலியாக உள்ள 12 ராஜ்யசபா இடங்களுக்கு செப்.,3ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த கேசவ ராவ் (தெலுங்கானா), மம்தா மோகன்தா (ஒடிசா) ஆகியோர் சமீபத்தில் ராஜினாமா செய்தனர். அதேபோல், அசாமில் இருந்து கமக்யா பிரசாத், சர்பானந்தா சோனாவால், பீஹாரில் இருந்து மிஷா பார்தி, விவேக் தாக்கூர், ஹரியானாவில் இருந்து தீபேந்தர் சிங் ஹூடா, மத்திய பிரதேசத்தில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா, மஹாராஷ்டிராவில் இருந்து உடயன்ராஜ் போன்ஸ்லே, பியூஷ் கோயல், ராஜஸ்தானில் இருந்து கே.சி.வேணுகோபால், திரிபுராவில் இருந்து பிப்லாப் குமார் ஆகிய ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர்கள், தற்போது லோக்சபா எம்.பி.,யாக தேர்வாகியுள்ளனர்.
இதனையடுத்து, இந்த 12 ராஜ்யசபா இடங்களும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அவற்றுக்கான தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக.,14ல் துவங்கும் வேட்புமனுத்தாக்கல், ஆக.,21ல் நிறைவடைகிறது. ஆக.,27 வேட்புமனு திரும்பப்பெற கடைசி நாள். செப்.,3ல் ராஜ்யசபா தேர்தல் நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.