ADDED : ஜன 29, 2025 02:38 AM

சண்டிகர் : கொலை, பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம்ரஹீம் 30 நாள் பரோலில் வெளியே வந்ததாக தககவல் வெளியாகியுள்ளது.
ஹரியானாவில் தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவராக இருப்பவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் 2017-ம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று ஹரியானாவின் ரோடக் மாவட்டம் சுனாரியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட முறை பரோல் பெற்று வெளியே வந்த நிலையில் கடந்தாண்டு (2024) ஆகஸ்டில் 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கும்படி, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் ராம் ரஹீம் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 21 நாட்கள் தற்காலிக விடுதலை அளிக்கப்பட்டுள்ளது. பரோல் முடிந்த நிலையில் கடந்தாண்டு செப்.02-ம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
சிறைக்கு சென்று 27 நாட்களே ஆன நிலையில் மீண்டும் 20 நாள் பரோல் கேட்டு மனு செய்தார். ஹரியானா சட்டசபைக்கு கட்நதாண்டு அக்.05-ம் தேதி தேர்தல் நடந்தது. அப்போது சாமியாரின் பரோல் மனுவை தேர்தல் ஆணையத்தின் பரிசீலனைக்கு ஹரியானா அரசு அனுப்பியது. ஹரியானா தேர்தல் ஆணையர் பங்கஜ் அகர்வால், கூடுதல் தலைமை செயலர் வாயிலாக சிறை நிர்வாகத்திற்கு அனுப்பினார்.இதனையடுத்து தகுந்த பரிசீலினைக்கு பின் சாமியாருக்கு தேர்தல் ஆணையம் 20 நாள் பரோல் வழங்கியது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 05-ம் தேதி டில்லி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்த ராம் ரஹீம் மனுவிற்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டதையடுத்து சிறையிலிருந்து வெளியே வந்தார்.
இதன் மூலம் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருந்த நாட்களில் இதுவரை 305 நாட்கள் பரோல் வாயிலாக சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார்.