ராமர் கோயில் நினைவு தபால் தலைகள்: பிரதமர் மோடி வெளியிட்டார்
ராமர் கோயில் நினைவு தபால் தலைகள்: பிரதமர் மோடி வெளியிட்டார்
UPDATED : ஜன 18, 2024 02:03 PM
ADDED : ஜன 18, 2024 01:16 PM

புதுடில்லி: அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.
அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி வரும் 22ல் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்விற்காக முக்கியமான தலைவர்கள், பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.
இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்டார். ராமர் கோயில், சூரியன், சராயு நதி மற்றும் கோயில் சிற்பங்கள் போன்ற படங்கள் அடங்கிய தபால் தலைகளை அவர் அறிமுகப்படுத்தினார். மேலும், உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பத்தையும் வெளியிட்டார்.
பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், 'ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யும் நிகழ்விற்கான ஏற்பாடு நடக்கையில் மற்றொரு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இன்று எனக்கு கிடைத்தது. ராமர் கோயிலை குறிப்பிடும் வகையிலான 6 நினைவு தபால் தலைகள் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் ராமர் பற்றிய தபால் தலைகளின் ஆல்பம் வெளியிடப்பட்டது. நாட்டு மக்களுக்கும், உலகம் முழுவதும் உள்ள அனைத்து ராம பக்தர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.