'காங்கிரசாரின் நெஞ்சை பிளந்து பார்த்தால் ராமர் இருப்பார்'
'காங்கிரசாரின் நெஞ்சை பிளந்து பார்த்தால் ராமர் இருப்பார்'
ADDED : ஜன 14, 2024 11:45 PM

சிக்கபல்லாப்பூர்: ''காங்கிரசார் நெஞ்சை பிளந்து பார்த்தால், ராமர் இருப்பார்,'' என்று, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., |பிரதீப் ஈஸ்வர் கூறியுள்ளார்.
சிக்கபல்லாப்பூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வில் மீண்டும் 'சீட்' பெறுவதற்காக, மசூதியை இடிப்போம் என்று, எம்.பி., அனந்த்குமார் ஹெக்டே கூறியுள்ளார். அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று கூறியவர் அவர்.
அவரது வாயால், மத்திய அமைச்சர் பதவியை இழந்தார். அயோத்தி ராமர் கோவில் அனைவரின் சொத்து. காங்கிரசாரின் நெஞ்சை பிளந்து பார்த்தால் ராமர், சித்தராமையா, அம்பேத்கர், சித்தகங்கா சிவகுமார சுவாமி இருப்பர்.
அரசியலில் 45 ஆண்டுகள் அனுபவம் உள்ள, முதல்வர் சித்தராமையாவை ஹெக்டே ஒருமையில் பேசியது சரி இல்லை. காங்கிரஸ் என்றால் சித்தராமையா தான்.
அவருக்கு எதிராக பேசுவதை பார்த்து கொண்டு, நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா. அனந்த்குமார் ஹெக்டே அவரது நாக்கை அடக்க வேண்டும். கலவரத்தை துாண்டும் வகையில் பேசும் அவரை, கைது செய்ய வேண்டும்.
மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா, கடந்த ஒன்பது ஆண்டுகளாக தொகுதியின் வளர்ச்சிக்கு எதுவுமில்லை.
பெங்களூரு - மைசூரு பத்து வழிச்சாலைக்கு, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது அனுமதி கிடைத்தது.
கடந்த 2013 - 2018ல் சித்தராமையா முதல்வராக இருந்த போது, நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கியது. ஆனால், பத்து வழிச்சாலை என்னால் வந்தது என்று, பிரதாப் சிம்ஹா தற்பெருமை பேசுகிறார். வரும் லோக்சபா தேர்தலில், அவரை தோற்கடித்து காட்டுவோம்.
தேர்தலில் தோற்ற பின்னர் அவர் தனது பாவங்களை, காவிரி ஆற்றில் நீராடி கரைக்கட்டும். சித்தராமையாவை பற்றி பேசினால், நாங்கள் பொறுத்து கொள்ள மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.