ADDED : ஏப் 23, 2025 02:10 AM

புதுடில்லி,
நீதிமன்றம் கடுமையுடன் குறிப்பிட்டதை தொடர்ந்து, 'சர்பத் ஜிகாத்' என பேசியதையும், அது தொடர்பான வீடியோவையும் திரும்பப் பெறுவதாக, யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்தார்.
யோகா குருவான பாபா ராம்தேவ், பதஞ்சலி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். பல ஆயுர்வேத மருந்துகள், இயற்கை பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்கிறது.
கொரோனா காலத்தில், தன் நிறுவனத்தின் மருந்துகள் தான் சிறந்தது என்றும், அலோபதி மருந்துகளால் குணப்படுத்த முடியாது என்றும் ராம்தேவ் பேசினார். இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. இதையடுத்து, தன் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
இந்நிலையில், பதஞ்சலி நிறுவனம் சார்பில் சமீபத்தில், குலாப் சர்பத் அறிமுகம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக வெளியிட்ட வீடியோவில், 'மற்றவர்கள் சர்பத் ஜிகாத்தில் ஈடுபடுகின்றனர். அவற்றின் விற்பனை வாயிலாக கிடைக்கும் பணம், மசூதிகள், மதரசாக்கள் கட்டவே பயன்படுத்தப்படுகிறது' என, ராம்தேவ் கூறியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'ரூஹ் அப்சா' என்ற சர்பத் விற்பனை செய்யும் 'ஹம்தர்த்' நிறுவனம், டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, 'எந்த ஒரு நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை' என, ராம்தேவின் வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. 'இந்த பேச்சு, எங்களுடைய மனசாட்சியை உலுக்குவதாக உள்ளது. மத ரீதியில் பிளவு ஏற்படுத்தும் வகையில், வெறுப்பு பேச்சாக இது உள்ளது' என, நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இது தொடர்பாக ராம்தேவ், தன் நிலைப்பாட்டை தெரிவிக்காவிட்டால், கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.
அடுத்த சில மணி நேரத்தில், தன் பேச்சு தொடர்பான வீடியோ, விளம்பரங்கள், சமூக வலைதள பதிவுகளை நீக்க ராம்தேவ் தயாராக உள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

