நள்ளிரவு கரையை கடக்கிறது ரேமல் புயல்: கோல்கட்டாவில் 400 விமானங்கள் ரத்து
நள்ளிரவு கரையை கடக்கிறது ரேமல் புயல்: கோல்கட்டாவில் 400 விமானங்கள் ரத்து
ADDED : மே 26, 2024 04:34 PM

கோல்கட்டா: ரேமல் புயல் இன்று( மே 26) நள்ளிரவு கரையை கடப்பதன் எதிரொலியாக கோல்கட்டாவில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம்( மே 24) மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, நேற்று காலை 5:30 மணிக்கு வலுப்பெற்றது. இது நேற்று வடக்கு திசையில் நகர்ந்து, மாலை 'ரேமல்' புயலாக வலுப்பெற்றது. இன்று காலை தீவிர புயலாக வலுப்பெற்று, நள்ளிரவு வங்கதேச கேப்புப்பாராவுக்கும், மேற்கு வங்கம் சாகர் தீவுக்கும் இடையே, கரையை கடக்கக் கூடும். புயல் கரையை கடக்கும் நேரம், தரைக்காற்று மணிக்கு 110 - 120 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 135 கி.மீ., வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனையடுத்து, புயல் கரையை கடக்கும் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். தெற்கு பர்கானா மாவட்டத்தில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. கோல்கட்டாவில் வெளி நாடுகள், வெளிமாநிலங்களுக்கு செல்ல வேண்டியது என 400 விமானங்கள் நாளை காலை 9 மணி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன. ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.