ADDED : டிச 03, 2024 07:52 AM

பெங்களூரு: “முதல்வர் சித்தராமையா மீதான 'முடா' வழக்கு தொடர்பாக, மற்றொரு முறை விளக்கம் அளிக்கும்படி லோக் ஆயுக்தா அதிகாரிகள் எனக்கு நோட்டீஸ் அளித்தனர். அதற்கு நான் பதில் அளித்துள்ளேன்,” என, பா.ஜ., தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
'முடா'வில் சட்டவிரோதமாக 14 மனைகளை பெற்றுள்ளது குறித்து, ஜூலை 20 மற்றும் 31, ஆகஸ்ட் 19ல் முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜினசாமி ஆகியோர் மீது லோக் ஆயுக்தாவில் புகார் அளித்தேன்.
இவர்கள் மட்டுமின்றி, பசவேகவுடா, ராஜிவ், நடேஷ் உட்பட, பல அதிகாரிகள் மீதும் ஆவணங்களுடன் புகார் அளித்துள்ளேன். இதுதொடர்பாக லோக் ஆயுக்தாவினர், விசாரணையை துவக்கியுள்ளனர். புகார் தொடர்பாக விளக்கமளிக்கும்படி எனக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதன்படி நானும் நேரில் ஆஜராகி, ஆவணங்களுடன் விவரித்தேன்.
முதல்வர் சித்தராமையா, இதற்கு முன்பு 1997 - 98, 2004 - 2006, 2013 - 2018ல் அரசில் பல பதவிகளை வகித்lபோது, தன் செல்வாக்கை பயன்படுத்தி, 'முடா'வில் மனைகளை பெற்றுள்ளார். விதிகளை மீறி, அரசுக்கு பெருமளவில் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.
தன் மைத்துனர் மல்லிகார்ஜுனசாமி, சட்டவிரோதமாக பெற்றுள்ள நிலத்தை, தன் மனைவி பெயருக்கு மாற்றியுள்ளார். ஊழலுக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.