ADDED : ஆக 07, 2011 02:00 AM
ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் மீன்கழிவுகளை கடலில் கொட்டுவதால், நாளுக்கு நாள் கடல் கருப்பு நிறமாக மாறி, சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ராமேஸ்வரத்தில் நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், சுகாதார கேடும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. படகுகள் நிறுத்துமிடம்(ஜெட்டி) அருகே திருக்கை மீன்களின் வால், குடல், கணவாய் மீன்களின் கழிவுகள் ஆகியவை டிரைசைக்கிள், வேன்களில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. இதனால் நீலக்கடல், கருமை நிறமாக மாறி வருகிறது. கடல் நீர் எப்போதும் எண்ணெய் கலந்து காணப்படுகிறது.
இது குறித்து மீனவர் ஒருவர் கூறும்போது: மீன் கம்பெனிகள் கழிவுகளை இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றனர். கெளுது எனப்படும் மீன்கள் அவற்றை உண்ண வருகின்றன. இரட்டை மடி மீன்பிடி காலங்களில் கழிவுகள் அதிகம் வரும். அப்போது இந்த பகுதியில் நிற்கவே முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசும். மீன் கழிவுகளை கடலில் கொட்டுவதை தவிர்க்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

