ராம்நகர் பெயர் மாற்றம்: சிவகுமார் கனவுக்கு 'வேட்டு'
ராம்நகர் பெயர் மாற்றம்: சிவகுமார் கனவுக்கு 'வேட்டு'
ADDED : மார் 19, 2025 09:17 PM
பெங்களூரு; ராம்நகர் மாவட்டத்தின் பெயரை, 'பெங்களூரு தெற்கு' என பெயர் மாற்ற வேண்டும் என்ற துணை முதல்வர் சிவகுமாரின் கனவுக்கு, மத்திய அரசு 'வேட்டு' வைத்துள்ளது.
கடந்தாண்டு ஜூலையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ராம்நகர் மாவட்டத்தின் பெயரை 'பெங்களூரு தெற்கு' மாவட்டம் என்று மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னபட்டணா இடைத்தேர்தலின் போதும், பெயர் மாற்றம் குறித்து, துணை முதல்வர் சிவகுமார் பேசியிருந்தார். இதனால் அவருக்கும், மத்திய அமைச்சர் குமாரசாமிக்கும் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது.
மாவட்டத்தின் பெயரில் ராமர் இருப்பதால், பெயரை மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக பா.ஜ.,வினரும் குற்றம்சாட்டி இருந்தனர்.
தடை
இந்த பெயர் மாற்றம் குறித்து, மத்திய அரசுக்கு, மாநில அரசு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், மத்திய அரசு, ஒப்புதல் அளிக்கவில்லை. இது தொடர்பாக இரண்டு மாதங்களுக்கு முன்னரே, மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
எதிர்க்கட்சிகளை புறக்கணித்து எடுக்கும் முடிவால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை எழலாம் என்பதால், அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிகிறது.
தேவையில்லை
இது குறித்து வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா கூறியதாவது:
ராம்நகர் மாவட்ட பெயரை மாற்றும் அமைச்சரவை முடிவை, மத்திய அரசு ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். தற்போதைக்கு பெயர் மாற்றம் பணியை தொடர வேண்டாம் என்று மட்டும் கூறி உள்ளனர்.
எனக்கு தெரிந்த வரை மாவட்டங்கள், இடங்களின் பெயரை மாற்றம் செய்வது, மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது. மத்திய அரசின் சம்மதம் தேவையில்லை. பெயர் மாற்றம் குறித்த தகவலை, மத்திய அரசுக்கு, தெரிவித்தால் மட்டும் போதுமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆனால், மூத்த அதிகாரிகளோ, 'மாவட்டம், நகரங்களின் பெயரை மாற்ற வேண்டும் என்றால், மத்திய அரசின் தடையில்லா சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும். இந்த சான்றிதழ் இல்லாமல், பெயரை மாற்ற முடியாது' என கூறுகின்றனர்.
மத்திய அரசின் முடிவால், துணை முதல்வர் சிவகுமாரின் கனவில் முட்டுக்கட்டை விழுந்து உள்ளது.