துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு என்.ஐ.ஏ., விசாரணையில் ராணா பகீர்
துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு என்.ஐ.ஏ., விசாரணையில் ராணா பகீர்
ADDED : ஏப் 13, 2025 12:25 AM
புதுடில்லி: மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணாவிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நடத்திய விசாரணையில், துபாயில் வசிக்கும் முக்கிய புள்ளியுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள், மஹாராஷ்டிராவின் மும்பைக்குள், கடந்த 2008 நவ., 26ல் புகுந்தனர்.
ரயில் நிலையம், இரண்டு ஹோட்டல்கள், யூதர்கள் மையத்தில் புகுந்து நடத்திய தாக்குதலில், 166 பேர் உயிரிழந்தனர்.
தீவிர முயற்சி
இந்த நாச வேலைக்கு மூளையாக செயல்பட்ட, வட அமெரிக்க நாடான கனடா குடியுரிமை பெற்று அமெரிக்காவில் வசித்து வந்த பாகிஸ்தானை சேர்ந்த தஹாவூர் ஹுசைன் ராணா, அமெரிக்காவில் 2011ல் கைது செய்யப்பட்டார்.
அவரை, இந்தியா அழைத்து வர நம் வெளியுறவுத் துறை தீவிர முயற்சி மேற்கொண்டது.
நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின் கடந்த 9ம் தேதி, என்.ஐ.ஏ., அதிகாரிகளிடம் ராணா ஒப்படைக்கப்பட்டார்.
பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 18 நாட்கள் என்.ஐ.ஏ., காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, டில்லியில் உள்ள என்.ஐ.ஏ., தலைமை அலுவலகத்தில் உயர் பாதுகாப்பு அறையில் அடைக்கப்பட்டுள்ள ராணாவிடம், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரிடம், மும்பை தாக்குதலை நடத்திய பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கி வரும் லஷ்கர் -- இ -- தொய்பா அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து என்.ஐ.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் கிலானி என்று அழைக்கப்படும் டேவிட் கோல்மன் ஹெட்லியின் நம்பிக்கைக்கு உரியவராக ராணா திகழ்ந்தார்.
இவர்கள் இருவரும் பாகிஸ்தான் ராணுவ பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.
தாக்குதல்
அன்று துவங்கிய அவர்கள் நட்பு, தொழிலில் பங்குதாரராக ஆகும் அளவுக்கு விரிவடைந்தது.
பின்னர் இருவரும் லஷ்கர் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் ரகசிய தொடர்பு வைத்து, மும்பை தாக்குதல் சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கு முன்பாக, துபாயைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவரை ராணா சந்தித்து சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர் யார், அவருக்கும், மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மும்பை தவிர நாட்டின் முக்கிய நகரங்களிலும் பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் வெளிவந்துள்ளது.
ராணா, தன் மனைவியுடன் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு 2008ல் வந்தார். உத்தர பிரதேசம், டில்லி, கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அவர், தன் மனைவியுடன் தங்கிய விபரம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
விசாரணையின்போது, ராணாவிடம் துபாயின் முக்கிய புள்ளி குறித்து துருவி துருவி பல கேள்விகளை எழுப்பினர்.

