ரூ.361 கோடிக்கு நிலம் விற்குது 'ரானே மெட்ராஸ்' நிறுவனம்
ரூ.361 கோடிக்கு நிலம் விற்குது 'ரானே மெட்ராஸ்' நிறுவனம்
ADDED : ஜூன் 28, 2025 04:38 AM
புதுடில்லி:'ரானே மெட்ராஸ்' நிறுவனம், வேளச்சேரியில் உள்ள, 3.48 ஏக்கர் நிலத்தை 'கேனோபி லிவிங் எல்.எல்.பி.,' என்ற நிறுவனத்துக்கு, 361 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளது.
கேனோபி லிவிங் எல்.எல்.பி., நிறுவனம், 'பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்' மற்றும் 'அரிஹந்த் பவுண்டேஷன்ஸ் அண்டு ஹவுசிங்' இடையேயான கூட்டு நிறுவனமாக விளங்குகிறது.
ரானே மெட்ராஸ் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த வாகன உதிரி பாக உற்பத்தியாளரான ரானே குழுமத்தை சேர்ந்தது. இந்த நிறுவனம், நிலம் விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், ஒப்பந்தத்தின் மதிப்பு 361.18 கோடி ரூபாய் எனவும், பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடத்தின் மொத்த பரப்பளவு 4.50 ஏக்கர். விற்பனை போக மீதமுள்ள நிலத்தை ரானே நிறுவனமே வைத்துக் கொள்ள உள்ளது. அங்கு, ஒரு புதிய அலுவலகம் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விற்பனை வாயிலாக, நிறுவனத்தின் கடனைக் குறைப்பதுடன், வெவ்வேறு பிரிவுகளின் கீழ் இயங்கும் அலுவலகங்களை ஒருங்கிணைத்து செலவு மிச்சப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.