தங்கம் கடத்திய ரன்யா ராவின் தந்தையான ஏ.டி.ஜி.பி.,க்கு சிக்கல்? அவருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்க குழு அமைப்பு
தங்கம் கடத்திய ரன்யா ராவின் தந்தையான ஏ.டி.ஜி.பி.,க்கு சிக்கல்? அவருக்கும் தொடர்புள்ளதா என விசாரிக்க குழு அமைப்பு
ADDED : மார் 11, 2025 11:17 PM

கர்நாடக வீட்டுவசதி மற்றும் உள்கட்டமைப்பு துறை கூடுதல் டி.ஜி.பி., ராமச்சந்திர ராவ். இவரது மகள் ரன்யா ராவ், 33; நடிகை. கடந்த 3ம் தேதி இரவு துபாயில் இருந்து பெங்களூருக்கு 12 கோடி ரூபாய் மதிப்பிலான 14.8 கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்தபோது, டில்லி வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
பின், பெங்களூரு லாவல்லி சாலையில் உள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும், 5 கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் சிக்கியது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின், ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டார்.
பண ஆசை
ரன்யா ராவை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் ரன்யா ராவ் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பரும், ஐந்து நட்சத்திர ஹோட்டல் உரிமையாளருமான தருண் கொண்டரு ராஜு கைது செய்யப்பட்டார்.
தருண், ரன்யா ராவ் இடையில் பல ஆண்டுகளாக நட்பு உள்ளது. தருணுக்கு துபாயிலும் சில தொழில்கள் உள்ளன. ரன்யா ராவ், ஐ.பி.எஸ்., அதிகாரி மகள் என்பதை பயன்படுத்தி கொண்ட தருண், ரன்யா ராவிடம் தங்க கட்டிகள் கடத்தி வந்தால், அதிக பணம் கிடைக்கும் என்று கூறி உள்ளார். பணத்தாசையில் தங்க கட்டிகளை கடத்தி வர, ரன்யா ராவும் ஒப்பு கொண்டு உள்ளார்.
அனைத்து வசதி
இதையடுத்து, தருண் கூறியதன்படி துபாய், அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் இருந்து, தங்க கட்டிகளை கடத்தி வந்துள்ளார். ரன்யா ராவ் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அவருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தருண் செய்து கொடுத்து உள்ளார்.
தருண், யாருக்காக தங்க கட்டிகள் கடத்தினார் என்பது குறித்து, அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்துகின்றனர். ஐ.பி.எஸ்., அதிகாரி மகள் என்று கூறிவிட்டு, விமான நிலையத்தில் சோதனை நடவடிக்கையில் இருந்து ரன்யா ராவ் ஒவ்வொரு முறையும் தப்பித்து வந்து உள்ளார்.
கைது வாய்ப்பு
ஆனால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்ட பின், அவரது வளர்ப்பு தந்தையான ஏ.டி.ஜி.பி., ராமசந்திர ராவ் கூறுகையில், ''எனது மகளுக்கும், ஜதினுக்கும் மூன்று மாதங்களுக்கு முன், திருமணம் நடந்தது. அதற்கு பின், எங்களுடன் தொடர்பில் இல்லை,'' என்று கூறி இருந்தார்.
ஆனால், ரன்யா ராவ் ஒவ்வொரு முறை துபாய் சென்று திரும்பும் போது, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு, 'என் மகள் ரன்யா ராவ் துபாயில் இருந்து வருகிறார்.
எனது குடும்பத்திற்கு அளிக்கப்படும் பாதுகாப்பின் கீழ், அவரை வெளியே அழைத்து வர வேண்டும். எந்த சோதனையும் செய்ய வேண்டாம்' என்று கூறியதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்த வழக்கில் ராமச்சந்திர ராவுக்கும் தொடர்பு உள்ளதா, மூத்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளை ரன்யா ராவ் தவறாக பயன்படுத்தினாரா என்பது பற்றி விசாரிக்க, கூடுதல் தலைமை செயலர் கவுரவ் குப்தா தலைமையில், அரசு நேற்று ஒரு குழுவை அமைத்து உள்ளது.
ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணையில், இந்த வழக்கில் ராமச்சந்திர ராவுக்கும் தொடர்பு உள்ளது என்று தெரியவந்தால் அவருக்கும் சிக்கல் தான். அவர் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
'பி' அறிக்கை
ராமச்சந்திர ராவ், கடந்த 2014ல் தென்மண்டல ஐ.ஜி.,யாக இருந்த போது, கேரளாவுக்கு ஆம்னி பஸ்சில் கடத்தப்பட்ட 2.20 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 2 கோடி ரூபாயை, ராமச்சந்திர ராவ், 'ஆட்டை' போட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீது வழக்கும் பதிவானது.
போலீசார் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று தெரிந்தது. நீதிமன்றத்தில் 'பி' அறிக்கை தாக்கல் ஆனது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ராமச்சந்திர ராவ் மீதான வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த சம்பவம் நடந்த 11 ஆண்டுகளுக்கு பின், மகள் தங்கம் கடத்தி வந்த வழக்கில், ராமச்சந்திர ராவ் சிக்கலை எதிர்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், தங்கம் கடத்திய வழக்கில், இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பகீர் தகவல் கூறினார். இதற்கு அமைச்சர்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
நிறைய தொழில்
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கில், அமைச்சர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பா.ஜ., தலைவர்கள் அரசியலுக்காக பொய் குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். ஏதாவது தகவல் இருந்தால் சி.பி.ஐ.,யிடம் தெரிவிக்கட்டும்,'' என்றார்.
அமைச்சர் பிரியங்க் கார்கே அளித்த பேட்டியில், ''தங்கம் கடத்திய வழக்கில், எந்த அமைச்சருக்கு தொடர்பு உள்ளது என்பதை, விஜயேந்திரா கூறட்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ., மற்றும் வருவாய் புலனாய்வு பிரிவு உள்ளது. அவர்களுக்கு தகவல் கொடுக்கட்டும். விஜயேந்திராவுக்கு துபாயில் நிறைய தொழில் உள்ளது என்று, பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் கூறி உள்ளார். இதுபற்றியும் விசாரிக்க வேண்டும்,'' என்றார்.
இந்நிலையில், நேற்று மாலை விதான் சவுதாவில் உள்ள, முதல்வர் அலுவலகத்தில் சித்தராமையாவை, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் சந்தித்தார். ரன்யா ராவ் வழக்கு குறித்த தகவல்களை அளித்துவிட்டு சென்றார்.
பின், சித்தராமையாவை, சிவகுமார் சந்தித்தார். இருவரும் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.