பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆம் ஆத்மி எம்எல்ஏ ஆஸி.,க்கு தப்பி ஒட்டம்
ADDED : நவ 09, 2025 05:52 PM

சண்டிகர்: பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா என்ப்வர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்து பேட்டி கொடுத்த அவர், 'ஜாமின் கிடைத்ததும் நாடு திரும்புவேன்' எனக்கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் சனூர் தொகுதி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. ஜிராக்பூரைச் சேர்ந்த ஒரு பெண் கொடுத்த புகார்படி, செப். 1ம் தேதி ஹர்மீத் சிங் மீது, சிவில் லைன்ஸ் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்தனர். ஹரியானாவின் கர்னல் மாவட்டம் தாப்ரி கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்த ஹர்மீத் சிங்கை கைது செய்ய, செப். 2ம் தேதி போலீசார் சென்றனர்.அங்கிருந்த அவரது ஆதரவாளர்கள் போலீஸ் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹர்மீத் சிங் காரில் ஏறி தப்பினார். அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், ஹர்மீத் சிங் பதன்மஜ்ராவுக்கு எதிராக போலீசார், 'லுக் - அவுட் நோட்டீஸ்' பிறப்பித்துள்ளனர். பாலியல் வன்கொடுமை வழக்கில் நேரில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பாட்டியாலா நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்நிலையில் செப்., முதல் தலைமறைவாக இருந்து வரும் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா, ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த பஞ்சாபி வெப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியின் மூலம் தெரியவந்துள்ளது.
அந்தப் பேட்டியில் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா கூறியதாவது: என் மீதான குற்றச்சாட்டு அரசியல் சதி. பஞ்சாப் மக்களுக்காக பேசுபவர்களின் குரலை ஒடுக்க முயற்சி நடக்கிறது. பஞ்சாபில் முக்கிய விஷயங்கள் குறித்து அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்துவதில்லை. சுதந்திரமான பேச்சுவார்த்தைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டில்லியில் தோற்ற தலைவர்கள் பஞ்சாபை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அங்கு அழித்ததை போல் இங்கும் செய்ய முயற்சிக்கின்றனர். எனக்கு ஜாமின் கிடைத்ததும் நாடு திரும்புவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

