பலாத்காரம் செய்து டாக்டர் கொலை மே.வங்கம் முழுதும் போராட்டம்
பலாத்காரம் செய்து டாக்டர் கொலை மே.வங்கம் முழுதும் போராட்டம்
UPDATED : ஆக 11, 2024 07:50 AM
ADDED : ஆக 11, 2024 12:15 AM

கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் அரசு மருத்துவக் கல்லுாரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது.
இது குறித்து விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொலையை கண்டித்து, மாநிலம் முழுதும் டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மர்மமான முறை
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக் கல்லுாரி செயல்படுகிறது.
இங்கு, முதுநிலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 30 வயது பெண் டாக்டர், நேற்று முன்தினம் கல்லுாரி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள கருத்தரங்கு அரங்கில், அரை நிர்வாணக் கோலத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவத்தில், சஞ்சய் ராய் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்; மேலும், ஐந்து பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பிரேத பரிசோதனையில், உயிரிழந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதுகுறித்து, கோல்கட்டா போலீஸ் கமிஷனர் வினீத் குமார் கோயல் நேற்று கூறுகையில், ''நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உயிரிழந்த மாணவி, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
அவசர சிகிச்சை
இதற்கிடையே, குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்கள் நேற்று மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். மேலும், அவசர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே டாக்டர்கள் பணியாற்றுவர் என்றும் அவர்கள் அறிவித்தனர்.
இதற்கு ஆதரவாக, மேற்கு வங்கத்தின் பல்வேறு அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனைகளில், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என, எதிர்க்கட்சியான பா.ஜ., வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சி எம்.எல்.ஏ., அக்னிமித்ர பால் கூறுகையில், ''உயிரிழந்த மாணவி யின் உடல் முழுதும் காயங்கள் உள்ளன. அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
''மாநில அரசு கட்டுப்பாட்டில் விசாரணை நடந்தால், உண்மை வெளியே வராது. இது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை கூறுகையில், 'என் மகள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இதில் உண்மையை மறைக்க சதி நடக்கிறது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்' என்றார்.
பெண் டாக்டர் கொலை வழக்கை, சி.பி.ஐ., உள்ளிட்ட அமைப்புகள் விசாரிக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்த சம்பவம் கொடூரமானது. குற்றவாளிகளுக்கு துாக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதே எங்களது எண்ணம். பயிற்சி டாக்டர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்.
மம்தா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,