பலாத்கார வழக்கு: ஐகோர்ட் நீதிபதி கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
பலாத்கார வழக்கு: ஐகோர்ட் நீதிபதி கருத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்
ADDED : ஏப் 16, 2025 04:11 AM

புதுடில்லி : பாலியல் பலாத்கார வழக்கில், புகார் கூறிய பெண்ணை விமர்சித்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி கூறிய கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, பாலியல் பலாத்காரம் தொடர்பாக கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, இதை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் தனி வழக்காக விசாரிக்கிறது.
சர்ச்சை
'போக்சோ சட்ட வழக்கில், சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது, உடையின் நாடாவை அறுப்பது என்பதை, பலாத்காரமாகவோ, பலாத்கார முயற்சியாகவோ கருத முடியாது' என, உயர் நீதிமன்றம் ஒரு வழக்கில் கூறியிருந்தது.
இது தொடர்பாக விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு, ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும், உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் மற்றொரு பாலியல் பலாத்கார வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி, சமீபத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கினார். அப்போது, 'குடிபோதையில் இருந்த பெண், ஆண் நண்பர் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதன் வாயிலாக பிரச்னையை அவரே வரவேற்றுள்ளார்' என, நீதிபதி கூறியிருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், போக்சோ வழக்குடன் இணைத்து, இதையும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. நீதிபதிகள் பி.ஆர். கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு நேற்று கூறியதாவது: அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இருந்து மற்றொரு சர்ச்சைக்குரிய கருத்து வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க விரும்பியிருந்தால், அதற்கான காரணத்தை தெரிவித்து வழங்கியிருக்கலாம்.
ஆனால், தேவையில்லாமல், புகார் கூறிய பெண்ணை விமர்சித்து கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற கருத்துக்கள், உத்தரவுகள், பொதுமக்களிடையே என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
ஆபத்தானவர்கள்
சிறுமியர் கடத்தல் தொடர்பான மற்றொரு வழக்கில், அலகாபாத் உட்பட பல உயர் நீதிமன்றங்கள் ஜாமின் வழங்கியுள்ளன. இதனால், குற்றஞ்சாட்டப்பட்ட சிலர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் நாட்டுக்கு ஆபத்தானவர்கள். அதனால், பாலியல் பலாத்காரம் உள்ளிட்டவை தொடர்பான வழக்குகளில், நீதிமன்றங்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியது.