ADDED : அக் 23, 2024 02:59 AM

திருச்சூர் :கேரள திரைத்துறையில் நடிகையருக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியின் அறிக்கை, கடந்த ஆகஸ்டில் வெளியானது. இதில், நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த நடிகர் முகேஷ், கொல்லம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். இவர் மீது, 2010ல், நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
இது தொடர்பாக வடக்கஞ்சேரி மற்றும் மரடு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த இரு வழக்குகளிலும், கடந்த செப்., 24ல், கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் எம்.எல்.ஏ., முகேஷுக்கு முன்ஜாமின் அளித்தது.
இந்நிலையில், நடிகை அளித்த பலாத்கார புகாரில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வான முகேஷை, சிறப்பு விசாரணை குழுவினர் நேற்று முன்தினம் முறைப்படி கைது செய்தனர். நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றுள்ளதால், சிறிது நேரத்துக்கு பின், அவர் விடுவிக்கப்பட்டார்.