பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்; பஞ்சாக்ஷரி குரு மடாதிபதி மீது புகார்
பெண் ஊழியர் பாலியல் பலாத்காரம்; பஞ்சாக்ஷரி குரு மடாதிபதி மீது புகார்
ADDED : செப் 25, 2024 09:17 PM

ராய்ச்சூர்: தேவதுர்காவின், பிரணவ பஞ்சாக்ஷரி குரு பீடத்தின் ஷம்பு சோமநாத சிவாச்சார்ய சுவாமிகள் மீது, பலாத்கார குற்றச்சாட்டை அங்கு பணியாற்றிய பெண் சுமத்தியுள்ளார்.
ராய்ச்சூர், தேவதுர்காவின், சுல்தான்புராவில் பிரணவ பஞ்சாக்ஷரி குருபீடம் உள்ளது. இதன் மடாதிபதியாக இருப்பவர் ஷம்பு சோமநாத சிவாச்சார்ய சுவாமிகள், 50. ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், மடத்தில் பணியாற்ற வந்திருந்தார். தன் 14 வயது மகளுடன் மடத்திலேயே தங்கியிருந்தார்.
இந்த பெண்ணை, ஷம்பு சோமநாத சிவாச்சார்ய சுவாமிகள் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, புகார் அளிக்க அந்த பெண், ஒவ்வொரு போலீஸ் நிலையமாக அலைபாய்ந்ததாக கூறப்படுகிறது.
அதன்பின் கப்பூர் போலீஸ் நிலையத்தில் மடாதிபதி மீது புகார் அளித்துவிட்டு, மகளுடன் சென்றுள்ளார். பெண்ணுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுத்து, அவரது வாயை அடைக்க முயற்சித்ததாகவும் புகாரில் கூறியுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த, போலீசார் அப்பெண்ணை தேடியபோது, எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை, ஷம்பு சோமநாத சிவாச்சார்ய சுவாமிகள் மறுத்துள்ளார். இது குறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:
என் மீது அந்த பெண் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். மடத்துக்கு சேவை செய்ய வருவதாக அவர் கூறியதால், நாங்களும் அனுமதித்தோம். அவர் கோசாலையில் சிறு, சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தார்.
மடத்தில் அந்த பெண்ணுக்கும், எங்களின் பக்தர்களுக்கும் ஏதோ காரணத்தால் தகராறு நடந்தது. எனவே இனி இங்கிருக்க வேண்டாம் என, கூறி மடத்தில் இருந்து அனுப்பினோம். இதனால் கோபமடைந்து போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் அளித்துள்ளார். அவரை வரவழைத்து புத்திமதி கூறி அனுப்பினோம். அவர் அவதுாறாக பேசுவது சரியல்ல.
இவ்வாறு அவர்கூறினார்.