புதுடில்லி:டில்லி உயிரியல் பூங்காவில் அரியவகை மான் உயிரிழந்தது. அதேபோல், கரும்புலி குட்டி இறந்தே பிறந்தது.
இதுகுறித்து, டில்லி உயிரியல் பூங்கா இயக்குனர் சஞ்சீத் குமார் கூறியதாவது:
தென்கிழக்கு ஆசியாவின் தாழ்வான சதுப்பு நிலப் பகுதிகளில் காணப்படும் அழிந்து வரும் நிலையில் உள்ள 'தாமின்' இன மான்கள் டில்லி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்படுகின்றன. அதில் ஒரு பெண் மான், தன் சகாக்களுடன் ஏற்பட்ட சண்டையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்தது.
அதேபோல, கரும்புலி ஒன்றுக்கு நேற்று குறைப்பிரசவம் ஏற்பட்டது. அதன் குட்டி இறந்தே பிறந்தது. இரண்டும் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த பிப்ரவரியில் ஒரு சிறுத்தை உயிரிழந்த நிலையில், ஜனவரி 25ம் தேதி ஒரு பெண் சங்காய் மான் ஒரு ஆண் மான் உடனான சண்டையில் இறந்தது. அதே ஜனவரியில் நீல்காய் இன மான் ஒன்று காயம் அடைந்து காப்பாற்றப்பட்டது. ஜனவரி 2ல் தர்மேந்திரா என்ற ஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இறந்து கிடந்தது.
கடந்த 1959ம் ஆண்டு நவம்பரில் துவக்கப்பட்ட டில்லி உயிரியல் பூங்காவில் 95 வகையான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகின்றன.

