ADDED : டிச 05, 2024 07:36 AM

தினமும் காலை, மாலை வாக்கிங் செல்வோருக்கு, ரத்னகிரி பூங்கா, பேவரிட் ஸ்பாட். துாய்மையான காற்றை சுவாசித்தபடி, இயற்கையை ரசித்து கொண்டே நடப்பது மனதுக்கு எவ்வளவு இனிமையாக இருக்கும் என்பதை, அனுபவித்து பார்த்தால் மட்டுமே உணர முடியும்.
'காபி நாடு' என்றே பிரசித்தி பெற்ற சிக்கமளூரு, சுற்றுலா பயணியர், இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கம்.
மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஏதாவது சிறப்பு இருக்கும். சிக்கமகளூரில் உள்ள சுற்றுலா தலங்களை போன்று, உலகில் வேறு எங்கும் இல்லை என்ற உணர்வு ஏற்படும்.
சிக்கமகளூருக்கு வரும் சுற்றுலா பயணியர், முல்லைய்யன கிரி மலை, நீர் வீழ்ச்சிகளுக்கு அதிகம் செல்கின்றனர்.
இங்கு 'ரத்னகிரி போரகே' என்ற அற்புதமான இடம் உள்ளது, பலருக்கும் தெரிவது இல்லை. இதற்கு அரசு வைத்துள்ள பெயர் மகாத்மா காந்தி பூங்கா. காலை, மாலையில் இங்கு வாக்கிங் செல்வது என்றால், இப்பகுதி மக்களுக்கு அலாதி பிரியம். இப்பூங்கா, 1967ல் திறக்கப்பட்டது.
இங்கிருந்தே முல்லைய்யன கிரியை பார்க்கலாம். கன்னடத்தில் சில ஹிட் திரைப்படங்களின் படப்பிடிப்பு இந்த இடத்தில் நடத்தப்பட்டது. 3 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்துள்ளது. குட்டீஸ்கள் விளையாட, ஒருநாள் சுற்றுலாவுக்கு பிளான் போட ரத்னகிரி பெஸ்ட்.
இது, சிக்கமகளூரு நகரின் ராமனஹள்ளியில் உள்ளது. பூங்காவுக்கு செல்ல பஸ் மற்றும் ஆட்டோக்கள் வசதி உள்ளது. பூங்காவில் சிறார்களுக்கு 10 ரூபாய், பெரியவர்களுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
குட்டீஸ்களுக்கு பிடித்தமான ரயில் வண்டி, டைனோசர் வாட்டர் பால்ஸ், ஊஞ்சல் குகைகள், சறுக்கு மரம் என, அனைத்து விளையாட்டு சாதனங்களும் உள்ளன.
வாரந்தோறும் ஞாயிறு மாலை, இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிக்கமகளூருக்கு வரும் சுற்றுலா பயணியர், ரத்னகிரி பூங்காவுக்கு வர மறக்காதீர்கள். காலை 9:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பூங்காவுக்குள் அனுமதி உள்ளது - நமது நிருபர் -.