ADDED : அக் 02, 2025 11:50 PM

கான்பூர்: உத்தர பிரதேசத்தின் கான்பூரில், ராவணனுக்கு என பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கோவில், விஜயதசமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக நேற்று திறக்கப்பட்டது.
தீமையை நன்மை வென்றதை நினைவுகூரும் விதமாக உத்தர பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சிவாலா பகுதியில், ராவணனுக்கு என தனியாக கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமி நாளில் மட்டும் திறக்கப்படும் இந்த கோவில், நேற்று காலை 6:00 மணிக்கு திறக்கப்பட்டது.
இரவு 8:30 மணி வரை திறக்கப்பட்டிருந்த இந்த கோவிலில், பக்தர்கள் பிரார்த்தனை செய்தனர். இதையொட்டி, பெண்கள் தங்களுக்கு திருமணம் நடைபெற வேண்டி பூசணி பூக்களை கோவிலுக்கு வழங்கி பிரார்த்தனை செய்தனர். அப்போது, பக்தர்கள் கடுகு எண்ணெயில் விளக்கேற்றினர்.
ராமாயணத்தில் இடம்பெற்றுள்ள அசுர மன்னனான ராவணனின் பிறந்த நாள் நேற்று காலை கொண்டாடப்பட்டது.
பின்னர் இரவில், அசுரன் ராவணனை ராமர் கொன்று முக்தி யளிக்கிறார். இதையொட்டி விஜயதசமி நாளான நேற்று இரவு இந்த கோவிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ராவணனின் உருவ பொம்மைகளை தீ வைத்து எரித்தனர்.
கான்பூர் தவிர நொய்டா அருகே உள்ள பிஸ்ராக் கிராமமும் ராவணன் பிறந்த இடமாக கருதப்படுகிறது. இந்த கிராமத்தில் உள்ள ராவணன் கோவிலில், தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது.