பிரபல ஓவியரின் ரூ.2.5 கோடி ஓவியம் நூதன திருட்டு; அதுல அப்படி என்னதான் இருக்கு!
பிரபல ஓவியரின் ரூ.2.5 கோடி ஓவியம் நூதன திருட்டு; அதுல அப்படி என்னதான் இருக்கு!
ADDED : செப் 11, 2024 11:06 AM

மும்பை: தெற்கு மும்பையில் உள்ள பிரபல ஏல நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்து, ரூ. 2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள பிரபல ஓவியர் சையத் ஹைதர் ராசாவின் ஓவியம் திருடப்பட்டுள்ளது.
பிரபல ஓவியர் சையத் ஹைதர் ராசா. 2016ம் ஆண்டு 94 வயதில் காலமானார். இவர் வரைந்த ஓவியங்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கும். அந்தவகையில், 1992ம் ஆண்டு இவரால் வரையப்பட்ட ஓவியம், 2022ம் ஆண்டு முதல் பிரபல ஏல நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு இரண்டரை கோடி ரூபாய்.
ஓவியம் திருட்டு
இந்நிலையில், இன்று(செப்.,11) ஏல நிறுவனத்தில் இந்த ஓவியம் திருடு போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை ஏல மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சித்தாந்த் ஷெட்டிக்கு வேலையாட்கள் தகவல் தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த அவர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். 'இந்த ஆண்டு ஓவியத்தின் உரிமையாளர் அதை ஏலத்தில் வைக்குமாறு கோரியுள்ளார். காணாமல் போன ஓவியத்துடன் வைக்கப்பட்டிருந்த 1500 மேற்பட்ட ஓவியங்கள் இருக்கிறது. ஆனால் சையத் ஹைதர் ராசாவின் ஓவியம் மட்டும் மர்மநபர்களால் குறிவைத்து திருடப்பட்டுள்ளது' என சித்தாந்த் ஷெட்டி தெரிவித்தார்.
வழக்குப்பதிவு
ஓவியத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 380 கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இது குறித்து போலீஸ் அதிகாரி, ' ஓவியத்தை மீட்க நாங்கள் ஒரு குழுவை அமைத்துள்ளோம். சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் காண முயற்சிக்கிறோம்' என்றார்.