வாசகர்களே 'தினமலர்' நாளிதழின் எஜமானர்கள்! டி.வி.ஆர்., 116வது பிறந்த நாள் விழாவில் பூரிப்பு
வாசகர்களே 'தினமலர்' நாளிதழின் எஜமானர்கள்! டி.வி.ஆர்., 116வது பிறந்த நாள் விழாவில் பூரிப்பு
ADDED : அக் 03, 2024 06:38 AM
பெங்களூரு: 'தினமலர்' நிறுவனர் டி.வி.ஆர்., 116வது பிறந்த நாள் விழாவை, தினமலர் வாசகர்கள் நேற்று பெங்களூரு அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடினர்.
மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நிறுவனரின் படத்துக்கு, குடும்பம், குடும்பமாக வந்து வாசகர்கள் மலர் துாவி வணங்கினர். கேக் வெட்டி மகிழ்ந்தனர். டி.வி.ஆர்., பிறந்த நாளை ஒட்டி, சிவாஜிநகர் ஸ்ரீராமுலா சன்னிதி தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவில் சார்பில், ஏழை பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக தினமலர் நாளிதழ் வாசகர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழர்கள், நாளிதழ் விற்பனையாளர்கள் சங்கத்தினர் உட்பட பலரும் பங்கேற்றனர். சில வாசகர்கள் தம்பதி சமேதராக கலந்து கொண்டனர்.
துவக்கத்தில் தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர், எதற்காக நாளிதழ் துவக்கினார் என்பதை தங்கவயலின் மூத்த வாசகர் செங்குட்டுவன் விளக்கினார்.
தினமலர் குறித்தும், நிறுவனர் குறித்தும் வாசகர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். விழாவில் அமர்ந்திருந்த போது, வாசகர்கள் தங்களுக்குள் புதிய நட்பை உருவாக்கி கொண்டதை காண முடிந்தது. வந்தவர்கள் பலரும் தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பல ஆண்டுகளாக தினமலரை படித்து வருவதாக பெருமை கொண்டனர்.
தினமலர் படிக்காமல் பொழுது விடியாது என்று கூறி, மற்ற வாசகர்களை பூரிப்படைய செய்தனர். 'வாசகர்கள் தான் தினமலரின் எஜமானர்கள்' என்ற நமது ஆசிரியரின் தாரக மந்திரத்தை வாசகர்கள் நினைவுப்படுத்தினர்.
ராமமூர்த்தி நகரை சேர்ந்த வாசகர் சிவராமன் ரவி, தினமலர் குறித்து கவிதை வாசித்தார். இது அனைவரையும் கவர்ந்தது. மாலை முதல், இரவு வரை அலுவலகத்திலேயே இருந்து, பிரிய முடியாமல் புறப்பட்டனர். தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்திய வாசகர்களின் கருத்துக்களை கீழே பார்ப்போம்.
...வாசகர்களின் எண்ணங்கள்...
* தினமும் பூக்கும் தாமரை
பட்டி தொட்டி எங்கும் என அனைத்து இடங்களுக்கும் தினமலர் சென்றடைய வேண்டும். இதன் மூலம் கல்வி, சமூகம், உலக அறிவும் பதிய வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறது. பல இடர்களை கடந்து, கம்பீரமாக செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் தினமும் பூக்கின்ற தாமரையாக உள்ளது. அனைத்து பூக்களையும் விட சிறப்பு வாய்ந்த பூ; இறைவனுக்கு உகந்த பூ. தினமலர் பல சாதனைகள், வெற்றியை குவிக்க வேண்டும்.
- சரளா ஆறுமுகம், பேராசிரியை
**
நடுத்தர மக்களின் நாளிதழ்
படித்தவர்கள், பணக்காரர்கள் மட்டுமே பத்திரிகை படித்து கொண்டிருந்த காலத்தை மாற்றி, ஏழை, நடுத்தர மக்களும் நாட்டு நடப்பை அறிந்து கொள்ளும் வகையில் பல தரப்பினரும் நாளிதழை படிப்பதற்கு துடிப்பாய் இருந்தவர் தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., தமிழ் மக்களின் குரலாக பல லட்சம் வாசகர்கள் படிக்கும் நாளிதழாக இன்றும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
தேசப்பற்று, மக்கள் பணி, தமிழக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஓயாமல் போராடி வருவதே இதற்கு காரணம். தமிழர்களின் செய்தி பத்திரிகையாக மட்டுமே அல்லாமல், அவர்களின் போர்வாளாகவும், அவர்களை பாதுகாக்க கூடிய போர் வீரனை போன்று விளங்கி கொண்டிருக்கிறது. அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட நிர்வாகத்தை அமைத்து தந்த தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரை போற்றாது புத்தேன் உலகு எனும் வள்ளுவனின் வாக்குக்கிணங்க அவரின் புகழ் வாழ வாழ்த்துகிறோம்.
- எஸ்.எம்.பழனி,
முன்னாள் இணை செயலர், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்றம், கர்நாடகா.
**
முதுகெலும்பு உள்ள பத்திரிகை
தினமும் தினமலர் நாளிதழ் படித்து கொண்டிருப்பவர்கள் மூலம், நிறுவனர் டி.வி.ஆர்., வாழ்ந்து கொண்டிருக்கிறார். எனக்கு சிறு வயதில் இருந்து நாளிதழ் படிக்கும் ஆர்வம் உள்ளது. தமிழகத்தில் நுாற்றுக்கணக்கான நாளிதழ்கள் வந்து சென்றுள்ளன. பல பத்திரிகைகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. முதுகெலும்பு உள்ள பத்திரிகை தினமலர் மட்டும் தான்.
எந்த செய்தியாக இருந்தாலும் துணிவுடன் எழுதக்கூடிய பத்திரிகை. முன்னர், பெங்களூரு அவென்யூ சாலையில் தமிழ் பத்திரிகைகள் விற்க முடியாது. பத்திரிகையை வைத்து கொண்டு படித்தால், அதை பிடுங்கி துாக்கி அடித்து விடுவர். சமீபத்தில் அவ்வழியாக சென்ற போது, மூன்று நான்கு இடங்களில் தினமலர் நாளிதழ் விற்பனையாவதை பார்க்க முடிந்தது. இதன் மூலம் கன்னடர்கள் கூட, தினமலர் நாளிதழை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது உண்மையாக உள்ளது.
ராசு மாறன்,
முன்னாள் தலைவர்,
பெங்களூரு தமிழ் சங்கம்
**
தெரியாததை தெரியவைக்கும்
இன்றைய தினம் மகான்களான மஹாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரி ஆகியோர் பிறந்த நாளில், டி.வி.ஆரும் பிறந்துள்ளார். இதை விட பெருமை வேறு என்ன வேண்டும். பத்திரிகை உலகில் தினமலர் முதலிடம் பிடித்துள்ளது. மற்ற நாளிதழ்கள், விளம்பரம் கொடுத்தால் தான் செய்தி போடுவோம் என்பர்.
ஆனால், தினமலரில் நல்ல செய்திகள், யாருக்கும் பயப்படாமல் செய்திகள் வெளியிடுகின்றனர். குழந்தை வரம் அளிக்கும் கோவில் குறித்து கர்நாடகாவில் பிறந்த நமக்கு தெரியாது. ஆனால், அதை கண்டுபிடித்து, நாளிதழில் வெளியிடுகின்றனர். கோவிலுக்கு குழந்தை பேறு கேட்டு வரும் பலரும், தினமலர் நாளிதழில் குறிப்பிட்ட கோவிலுக்கு செல்லுங்கள் என கூறுவேன்.
வ.ஸ்ரீதரன் குருசாமி
ஸ்ரீகிருஷ்ண பகவான், ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில், ஓல்டு மார்க்கெட் சாலை.
**
எங்களுக்கும் கவுரவம்
கர்நாடகாவில் கன்னட நாளிதழ்கள் செய்ய வேண்டிய பணிகளை, தினமலர் நாளிதழ் செய்வது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏழை பெண்களுக்கு சேலைகள் வழங்குவது உட்பட பல மக்கள் நல பணிகளை செய்கின்றனர். பெரியவர் நிறுவிய தினமலரின் ஏஜென்டாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏஜென்ட், நாளிதழ் வினியோகம் செய்யும் குழந்தைகளுக்கும் தினமலர் உதவ வேண்டும்.
சம்புலிங்கம்,
தலைவர்,
கர்நாடக நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்கம்
**
ஒரு பக்கம் விடாமல்...
நாம் தினமலர் வாசிப்பதற்கு மூல காரணம் டி.வி.ஆர்., தான். ஆரம்ப காலத்தில் இந்த பத்திரிகை வெளி வருவதற்கு அவர் எவ்வளவு உழைத்தார் என்பது எனக்கு தெரியும். பல சவால்களை மீறி, 74 ஆண்டுகளாக உண்மையின் உரைக்கல்லாக உள்ளது. உண்மைக்கு எப்போதும் விலை உண்டு. உண்மையையே பேச வேண்டும் என்று நம் திருவள்ளுவர் கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறையும் அந்துமணி கேள்வி பதில் பகுதியில், 'உங்கள் எஜமானர்கள் யார்' என்று கேட்டால், 'எங்கள் வாசகர்கள் தான் எங்களின் எஜமானர்கள்' என்பார். அவரின் அடிமனதில் வாசகர் எஜமானர்கள் என்ற விதை ஆழமாக பதிந்துள்ளது. ஒரு பக்கத்தை கூட விடாமல் அனைத்து செய்திகளையும் படித்துவிடுவேன். மக்களுக்கு என்ன முக்கியமான செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை அறிந்து வெளியிடுகின்றனர்.
குருபிரசாத்,
வாசகர், டிம்பர் யார்டு லே - அவுட்.
**
சமுதாயம், மதமே கிடையாது
மதுரையில் நான் இருந்த போது, 1985 முதல் அங்குள்ள தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து வந்தோம். இன்றும் எங்களின் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தினர், நிறுவனர் சிலைக்கு மாலை அணிவித்து வருகின்றனர். பெங்களூருக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. எந்த சமுதாயம், எந்த மதமாக இருந்து விழாவுக்கு அழைத்தாலும், தினமலர் நிறுவனர் அங்கு சென்றுவிடுவார். அவரின் பிறந்த நாளில் நானும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
சுப்பிரமணியன்,
தலைவர்,
பிராமணர் சபா, குந்தலஹள்ளி அறக்கட்டளை.
... பாக்ஸ் ...
* கன்னடத்தில் தினமலர் வேண்டும்
கர்நாடக நாளிதழ் வினியோகஸ்தர்கள் சங்க செயலர் சுரேஷ் கூறியதாவது:
மஹாத்மா காந்தி, லால் பகதுார் சாஸ்திரி போன்று துணிச்சலுடன் 75 ஆண்டுகளுக்கு முன் துவக்கினார். தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா முழுதும் வினியோகம் செய்யப்படுகிறது.
கர்நாடகாவில் தினமலர் நம்பர் ஒன் நாளிதழாக வர வேண்டும். இந்த நிர்வாகம், கர்நாடகாவில் கன்னடத்தில் தினமலர் நாளிதழ் வெளியிட வேண்டும்.
நீங்கள் எவ்வளவு உண்மை செய்திகள் தருகிறீர்களோ, கன்னட மக்கள் மிக எளிதாக உங்களை ஏற்றுக் கொள்வர். இப்போது டிவிக்களில் தருவது 'பிளாஷ் நியூஸ்' தான். ஆனால் விரிவான செய்திகள் தருவது நாளிதழ்கள் மட்டுமே. இந்த நாளிதழ்களை படிக்கவும் வாசகர்கள் உள்ளனர்.
கன்னட நாளிதழ்களுக்கு 216 ஆண்டுகள் வரலாறு உள்ளது. நாளிதழில் படிக்கும் வாசகர்கள் இன்னமும்; இருப்பர். நாளிதழ் வினியோகிப்பவர்கள், முகவர்களின் பிள்ளைகளுக்கு, நீங்கள் பணம் தர வேண்டாம். எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி.,யில் 80 முதல் 85 சதவீதம் மதிப்பெண் எடுக்கும் மாணவ - மாணவியருக்கு, நோட்டு புத்தகங்கள், சான்றிதழ் கொடுத்து, ஊக்குவிக்க வேண்டும்.
ஆண்டில் எங்களுக்கு 361 நாட்கள் மழை, குளிரிலும் பணியாற்றுகிறோம்; நான்கு நாட்கள் மட்டுமே எங்களுக்கு விடுமுறை கிடைக்கிறது. பெலகாவியில், நாளிதழ் வினியோகிப்பவர்கள் வீடுகளில் துக்க விஷயம் நடந்த போதும், காலையில், நாளிதழ் வினியோகித்த பின்னரே, மற்ற பணிகளை மேற்கொள்வர்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் காமராஜர் இன்று நினைவு நாள். அவர் படிக்கவில்லை; ஆனாலும், நாளிதழ் மூலம் மாணவர்களின் நிலையை அறிந்தார். கர்நாடகா, ஆந்திராவில் மதிய உணவு திட்டம் கொண்டுவர காரணமாக இருந்தவர் காமராஜர். அவரை போன்று ஆட்சி செய்தால், நாடு சுபிட்சம் அடையும்.
இவ்வாறு அவர் பேசினார்.