விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்
விவாதத்திற்கு தயாரா? பிரியங்காவிற்கு ஸ்மிருதி இரானி சவால்
ADDED : மே 09, 2024 12:05 PM

அமேதி: நாட்டு நலன் தொடர்பான பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, எந்த விவகாரங்கள் குறித்தும், எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த டிவியிலும் விவாதத்திற்கு பிரியங்காவும், ராகுலும் தயாரா எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று ( மே 08) அளித்த பேட்டியில், பயனற்ற பிரச்னைகளை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுகிறேன் எனக்கூறியிருந்தார்.
இதனை மறுத்து அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது: எந்த விவகாரங்கள் குறித்தும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பா.ஜ., உடன் ராகுலும், பிரியங்காவும் விவாதம் நடத்தட்டும். இதற்கான டிவி சேனலை அவர்களே தேர்வு செய்யட்டும். ஒரு பக்கம் ராகுலும், பிரியங்காவும் அமரட்டும். மறுபுறம் பா.ஜ., செய்தித் தொடர்பாளர் அமருட்டும். அனைத்தும் தெளிவடையும். எங்களது கட்சியை பொறுத்தவரை சுதன்ஷூ திரிவேதி மட்டும் போதும். அவர்களுக்கு அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும். இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார்.