பயங்கரவாதிகளுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் தயார்: ராஜ்நாத் சிங்
பயங்கரவாதிகளுக்கு எதிரான எந்த தாக்குதலுக்கும் தயார்: ராஜ்நாத் சிங்
ADDED : செப் 27, 2026 05:42 PM
புதுடில்லி: ‘‘நம் அண்டை நாடு தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்து வரும் நிலையில், எந்தவொரு தாக்குதலையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே இருக்கிறோம்,’’ என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரித்துள்ளார்.
டில்லியில் தனியார் செய்தி டிவி சேனல் சார்பில் ராணுவ மாநாடு நடைபெற்றது. இதில் நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். அப்போது அவர் பேசியதாவது:
நம் நாடு அமைதியை மட்டுமே நம்புகிறது. போரை விரும்பவில்லை. மற்றொரு நாட்டின் நிலபரப்பை கைப்பற்றவோ, அச்சுறுத்தவோ நாம் விரும்புவதில்லை. அதே சமயம், அமைதியாக இருப்பதற்கும்; பலவீனமாக இருப்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
அமைதியை விரும்பும் அதே வேளையில், தேசத்தின் பாதுகாப்பில் எந்த சமரசத்திற்கும் இடம் கிடையாது. நம் அண்டை நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்தும் வரை, பயங்கரவாதிகளுக்கு எதிராக எந்தவொரு தாக்குதலையும் நடத்த நாம் தயாராகவே இருக்கிறோம் என்பதை உலக நாடுகளுக்கும் தெரிவிக்க விரும்புகிறோம்.
நாம் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொள்ள விரும்புகிறோம். ஆனால், எந்த நாடாவது பயங்கரவாதத்தை ஊக்குவித்தால், அந்த நாட்டுடன் பேசுவதை நிறுத்திக் கொள்வோம்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
