புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு
புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும்; பினராயி விஜயன் அறிவிப்பு
ADDED : டிச 04, 2024 12:58 PM

திருவனந்தபுரம்; பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் பெஞ்சல் புயல் ஏற்படுத்திய தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு நிலை திரும்பவில்லை. உணவு, குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த கோரியும் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்களுக்கு இடையே மீட்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரம் காட்டினாலும் நிலைமை இன்னமும் சீராகவில்லை. இந் நிலையில் புயலால் பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு கேரளா துணை நிற்கும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது; பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீது தான் எங்களின் முழு எண்ணங்கள் இருக்கின்றன. இதுபோன்ற சவாலான நேரத்தில் அண்டை மாநிலங்களுடன் கேரளா எப்போதும் ஒற்றுமையாக நிற்கிறது.
தமிழகம் விரும்பும் எந்த உதவிகளையும் வழங்க கேரளா தயாராகவே உள்ளது. இரு மாநிலங்களும் இணைந்து பேரழிவில் இருந்து மீண்டு வருவோம்.
இவ்வாறுஅந்த பதிவில் பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.