சிக்கோடியில் போட்டியிட தயார்; அமைச்சர் மகள் பிரியங்கா அறிவிப்பு
சிக்கோடியில் போட்டியிட தயார்; அமைச்சர் மகள் பிரியங்கா அறிவிப்பு
ADDED : மார் 19, 2024 11:00 PM

பெலகாவி : “காங்கிரஸ் மேலிடம் கூறினால், சிக்கோடி தொகுதியில் போட்டியிட தயார்,” என, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி மகள் பிரியங்கா அறிவித்துள்ளார்.
கர்நாடக பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி. இவரது மகள் பிரியங்கா. லோக்சபா தேர்தலில் சிக்கோடி தொகுதி, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று பேச்சு அடிபடுகிறது.
மகளை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக, சிக்கோடி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளின் காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்களுடன் சதீஷ் ஜார்கிஹோளி தொடர்ந்து, ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சதீஷ் ஜார்கிஹோளி எம்.எல்.ஏ.,வாக உள்ள, யம்கன்மரடி தொகுதியில் பிரியங்காவும், அவரது சகோதரர் ராகுலும் பிரசாரத்தைத் துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து பிரியங்கா அளித்த பேட்டி:
சிக்கோடி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக, நான் போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில், வேட்பாளரை அறிவிப்பர் என்று நினைக்கிறேன். கட்சி மேலிடம் கூறினால், சிக்கோடியில் போட்டியிட தயார். எனக்கு 'சீட்' கிடைக்கவில்லை என்றாலும் கவலை இல்லை. கட்சி யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ, அவர்கள் வெற்றிக்காக கடுமையாக உழைப்பேன்.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதிகளை பற்றி, வீடு, வீடாக சென்று, மக்களிடம் எடுத்துக் கூறுவோம். சிக்கோடி பகுதி மக்களின் தலைவராக, எனது தந்தை சதீஷ் ஜார்கிஹோளி உள்ளார். இப்பகுதி மக்களுக்கு அவர் ஏராளமான, உதவிகள் செய்து உள்ளார். வளர்ச்சிப் பணிகளும் செய்து இருக்கிறார். இதனால் அவரது சாதனைகளையும் எடுத்து கூறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

