போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
போரை நிறுத்துவதற்கு உதவ தயார் ; ஜெய்சங்கரிடம் அமெரிக்கா அமைச்சர் பேச்சு
UPDATED : மே 10, 2025 06:18 PM
ADDED : மே 10, 2025 12:06 PM

புதுடில்லி: 'இந்தியா பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்த உதவி செய்ய தயார். மோதலை தணிப்பதற்கு தேவையான வழியை இந்தியா கண்டறிய வேண்டும்' என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக தாக்கி வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவ தளவாடங்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களால் உலக நாடுகளிடையே பதற்றம் நிலவி வருகிறது. இருநாடுகளும் தாக்குதலை நிறுத்தி, எல்லையில் அமைதியை உறுதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் தொலைபேசியில், போர் நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தாக்குதலை தணிப்பதற்கு தேவையான வழிகளை இந்தியா கண்டறிய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கு இடையே பிரச்னைகளை சரி செய்து, அமைதியை நிலை நாட்டுவதற்கு தேவையான உதவிகளை செய்ய அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ, பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிருடன் தொலைபேசினார். அப்போது, இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான சூழலை தவிர்க்க தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அதேபோல, இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அமைச்சர் ஜெய்சங்கர்; அமெரிக்க அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் இன்று காலை தொலைபேசியில் பேசினேன். இந்தியாவின் அணுகுமுறை எப்போதும் சரியானதாகவும், பொறுப்புடையதாகவும் தான் இருக்கும். தற்போதும் அப்படித்தான் இருக்கிறது, என்று குறிப்பிட்டுள்ளார்.
போர் நிறுத்தம்
இதற்கிடையே, இரு நாடுகளும், இன்று மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.